சாம்பியன்ஸ் லீக் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் பெரும் ஏமாற்றம் அளித்தன.
சொந்த மண்ணில் அசத்தும் இந்த அணிகள், வெளிநாட்டில் சொதப்புகின்றன. டில்லி அணி மட்டும் ஓரளவுக்கு திறமை வெளிப்படுத்தியது.
தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாதித்த அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) தொடரில் அசத்திய நான்கு அணிகள் கலந்து கொண்டன.
சச்சின் சொதப்பல்:
இதில் நடப்பு சாம்பியனாக வந்த மும்பை அணியில் சச்சின், ரோகித் சர்மா, போலார்டு, அம்பதி ராயுடு என பெரும் பேட்டிங் படை இருந்தது. பவுலிங்கில் கேப்டன் ஹர்பஜன், மலிங்கா போன்ற அனுபவ வீரர்கள் இருந்தனர்.
ஆனாலும், தென் ஆப்ரிக்க ஆடுகளத்திற்கு ஏற்ப இவர்களால் பக்குவப்படுத்திக் கொள்ள முடியவில்லை. லயன்ஸ், சென்னை, சிட்னி சிக்சர்ஸ் அணிகளிடம் தோல்வி அடைந்தது. ஒரு வெற்றி கூட பெறாமல் நாடு திரும்பியது.
அணியின் நட்சத்திர வீரரான சச்சின் ஆட்டம் தான் பெரும் ஏமாற்றம் அளித்தது. இவர் நான்கு இன்னிங்சில் 47 ரன்கள்(சராசரி 11.75, ஸ்டிரைக் ரேட் 71.21) தான் எடுத்தார்.
இதில், இரண்டு முறை "போல்டு' ஆனது துரதிருஷ்டம். "டுவென்டி-20' போட்டிக்கு ஏற்ப அதிரடியாக விளையாட தவறிய இவர், ஒரு நாள் போட்டி போல மந்தமாக "பேட்' செய்ததால், அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. மற்ற பேட்ஸ்மேன்களும் சோபிக்காததால், அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
அஷ்வின் வீண்:
கடந்த 2010ல் சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோப்பை வென்ற சென்னை அணியும் பெரிதாக சாதிக்கவில்லை. சிட்னி, லயன்ஸ் அணிகளிடம் தோற்றது. பின் மும்பை, யார்க்ஷயர் அணிகளுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்றது.
"டுவென்டி-20' அரங்கில் சிறந்த அணியாக கருதப்பட்ட சென்னை, இம்முறை அரையிறுதியை கூட எட்டாதது வருத்தமான விஷயம். தோனி, ரெய்னா, அஷ்வின், ஜடேஜா என இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இடம் பெற்ற போதும், அரையிறுதியை எட்ட வேண்டும் என்ற எண்ணம் துளியும் காணப்படவில்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் நான்கு போட்டிகளில் 3 விக்கெட் தான் வீழ்த்தினார். இவர் சொப்பியதால், அணி எழுச்சி காண முடியவில்லை.
காம்பிர் ஏமாற்றம்:
நடப்பு ஐ.பி.எல்., சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய கோல்கட்டா அணி ஆரம்பத்தில் டில்லி, ஆக்லாந்திடம் தோற்றது. டைட்டன் அணிக்கு எதிராக மட்டும் 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் அளித்தது. பந்துவீச்சில் பாலாஜி ரன்களை வாரி வழங்கினார். கேப்டன் காம்பிரை தான் அணி அதிகம் நம்பி இருந்தது. இவர் 3 இன்னிங்சில் 49 ரன்கள் மட்டும் எடுத்து, அணியின் அரையிறுதி வாய்ப்பை தகர்த்தார்.
மொத்தத்தில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் அலட்சியமாக செயல்பட்ட இந்த மூன்று ஐ.பி.எல்., அணிகளும், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை ஏமாற்றிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும்.
தவறுகள் செய்தோம்
சென்னை அணியின் ரெய்னா கூறியது:
சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. சில போட்டிகளில் தவறு செய்தோம். இதன் காரணமாக நாடு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சாம்பியன்ஸ் லீக் கோப்பை வெல்லும் தகுதி இருப்பதாகவே உணர்கிறேன்.
யார்க்ஷயர் அணிக்கு எதிராக கேப்டனாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டிக்கு முன் தோனி, என்னை கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு கூறினார். கேப்டனாக சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார். கேப்டன் பொறுப்பு கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இப்போட்டியில் எங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் பத்ரிநாத் சிறப்பாக விளையாடினார்.
இவ்வாறு ரெய்னா கூறினார்.
0 comments:
Post a Comment