சூதாட்ட அம்பயர்கள் சஸ்பெண்ட் - ஐ.சி.சி., அதிரடி நடவடிக்கை


கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு அம்பயர்களை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) "சஸ்பெண்ட்' செய்தது. 

கிரிக்கெட் வீரர்களைப் போல, அம்பயர்களும் பணம் பெற்றுக் கொண்டு "பிக்சிங்கில்' ஈடுபட்டதை, இந்தியா "டிவி' புலனாய்வு செய்தியின் மூலம் அம்பலப்படுத்தியது. 

பாகிஸ்தானின் நதீம் கவுரி, அனீஸ் சித்திக், வங்கதேசத்தின் நாதிர் ஷா மற்றும் இலங்கையின் காமினி திசநாயகே, மவுரிஸ் வின்ஸ்டன், சாகரா கல்லாகே என, 6 அம்பயர்கள் பிடிபட்டனர். 

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் போர்டுகள் விசாரணை நடத்துகின்றன. இதனிடையே, விசாரணை முடியும் வரை இவர்களை ஐ.சி.சி., "சஸ்பெண்ட்' செய்தது. 

இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கை:

இந்தியா "டிவி' நடத்திய புலனாய்வில் பணம் பெற்றுக் கொண்டு "பிக்சிங்' செய்தது அம்பலமானது. இதையடுத்து சம்பந்தப் பட்ட ஆறு அம்பயர்களும், முழு விசாரணை முடியும் வரை "சஸ்பெண்ட்' செய்ய ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் உள்ளூர் அல்லது எந்த சர்வதேச போட்டிகளிலும் இவர்கள் அம்பயர் பொறுப்பேற்க முடியாது. 

இவர்கள் ஐ.சி.சி., ஒப்பந்த பட்டியலில் இல்லை. அந்தந்த கிரிக்கெட் போர்டுகள் தான் அம்பயர் பணிக்கு அமர்த்தின. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எதற்கும் தயார்:

புலனாய்வு செய்தி குறித்து இந்தியா "டிவியின்' தலைவர் கூறுகையில்,"" நாங்கள் வெளியிட்ட செய்தி உண்மையானது. வீடியோ குறித்து எவ்வித விசாரணைக்கும் தயாராக உள்ளோம். அம்பயர்கள் இதுபோன்ற "கிரிமினல்' செயலில் ஈடுபடுவது, கிரிக்கெட்டுக்கு அழகல்ல,'' என்றார்.

வழக்கு தொடர முடிவு

"சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பாகிஸ்தான் அம்பயர் நதீம் கவுரி கூறுகையில்,"" இந்தியா "டிவி' வெளியிட்ட வீடியோ போலியானது. இதை தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றியுள்ளனர். 

இவ்விஷயம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவர்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. விசாரணையை முடித்த பின், சம்பந்தப்பட்ட சேனலின் மீது வழக்கு தொடர்வேன்,'' என்றார். 

0 comments:

Post a Comment