இந்திய அணிக்கு தேவை போஸ்ட் மார்டம்


இந்திய அணியின் செயல்பாடு சமீப காலமாக மிக மோசமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடர், ஆசிய கோப்பை மற்றும் தற்போதைய "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் என ஏமாற்றம் தொடர்கிறது. 

இதற்கான காரணங்களை அக்குவேறு ஆணிவேறாக("போஸ்ட் மார்டம்' போல) ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கேப்டனாக தோனியின் வியூகம் எடுபடவில்லையா, சேவக், ஜாகிர் போன்ற சீனியர்களை நீக்க வேண்டுமா என்பது போன்ற விஷயங்களை புதிய தேர்வுக்குழு தலைவர் சந்தீப் படேல் ஆய்வு செய்து, அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் முயற்சியில் இறங்க வேண்டும்.

கடந்த 2007ல் முதன் முதலாக இந்திய அணிக்கு தலைமை ஏற்ற தோனி, "டுவென்டி-20' உலக கோப்பை வென்று தந்தார். பின் 2009, 2010ல் நடந்த தொடரில் "சூப்பர்-8' சுற்றில் ஒரு வெற்றி கூட பெறாமல் திரும்பியது. 

இம்முறை நன்கு அறிமுகமான இலங்கையில், தொடர் நடப்பதால் பெரும் நம்பிக்கையுடன் சென்றது இந்திய அணி. ஆனால், ஆப்கானிஸ்தானையே தடுமாறித்தான் வென்றது. பின் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, "சூப்பர்-8' சுற்றை, வழக்கம் போல தோல்வியுடன் துவக்கியது. 

மீண்டும் "அவுட்':

ஒரு வழியாக 5 ஆண்டுகளுக்குப் பின், இச்சுற்றில் முதல் வெற்றி, பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்தது. அடுத்து தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி 4 புள்ளி பெற்றாலும், "ரன்ரேட்' அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பு மீண்டும் பறிபோனது. இதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து தவறுகளை கண்டுபிடிக்க வேண்டும்.

சேவக்கிற்கு எதிர்ப்பு:

இந்திய அணியில் சீனியர் வீரர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து மோசமாகவே உள்ளது. உதாரணமாக சேவக் விளையாடிய 3 போட்டிகளில், எடுத்தது, 54 (சராசரி 18) ரன்கள் தான். இவர், குறைந்தது 15 ஓவர்கள் களத்தில் இருக்க வேண்டும். அப்படி செய்தால் எளிதான வெற்றி கிடைத்து விடும். 

வெஸ்ட் இண்டீசின் கெய்ல், ஆஸ்திரேலியாவின் வாட்சன் இப்படித்தான் செய்கின்றனர். ஆனால், சேவக் அவசரப்பட்டு, செய்த தவறையே திரும்பச் செய்து விரைவில் அவுட்டாகி விடுகிறார். பேட்டிங் தவிர, "ஆப் ஸ்பின்' பவுலிங் செய்வதிலும் இவர் வல்லவர். 

ஆனால், தோனிக்கு இவர் மீது நம்பிக்கை கிடையாது. ஒருவேளை, இவரது தோள்பட்டை காயத்தினால் கூட, பவுலிங் தராமல் இருக்கலாம். அப்படி என்றால் அணியில் இவர் எதற்கு இருக்க வேண்டும்.

ஜாகிர் போதும்:

சேவக்கிற்கு அடுத்து வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் (4 போட்டி, 3 விக்.,). துவக்க ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறும் இவரது சராசரி 7 ரன்னுக்கும் மேலாக உள்ளது. 

பீல்டிங்கிலும் ஜாகிர் கான் சொதப்புகிறார். இவரது "தந்திரமான' பவுலிங் திறமை டெஸ்ட் போட்டிக்கு மட்டும் போதுமானது. "டுவென்டி-20', ஒரு நாள் போட்டிக்கு பிரவீண் குமார் போன்ற பொருத்தமான வேறு பவுலர்கள் தான் அணிக்கு தேவை.

யுவராஜ் ஏமாற்றம்:

"கேன்சர்' பாதிப்பில் இருந்து, இரும்பு இதயத்துடன் மீண்டு, சர்வதேச போட்டிகக்கு திரும்பினார் யுவராஜ் சிங். இவர், 8 விக்கெட் (சராசரி 6 ரன்கள்) வீழ்த்தியதை மறுக்க முடியாது தான். ஆனால், இவரிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது அதிரடி பேட்டிங்கை தான். இம்முறை, 5 போட்டிகளில் 61 பந்துகளை சந்தித்த இவர், எடுத்தது 66 ரன்கள் தான்.

காம்பிர் சொதப்பல்:

காம்பிரை பொறுத்தவரை இத்தொடரில் 5 போட்டியில் 80 ரன்கள் (72 பந்து) தான் அடிக்க, அணியில் இவரது இடம் கேள்விக்குறி தான்.

ஹர்பஜன் எங்கே:

"ஆல் ரவுண்டர்' இர்பான் பதான் செயல்பாடு திருப்தி தான் என்றாலும், பந்தின் வேகம் 120 கி.மீ.,க்கும் மேல் செல்ல மறுக்கிறது. சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். நீண்ட இடைவெளிக்குப் பின், இங்கிலாந்துடன் அசத்தல் திறமை வெளிப்படுத்தினார். இவரை தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் சேர்க்கவில்லை. 

ரோகித் வீண்:

தொடர்ச்சியான 20 மோசமான இன்னிங்சிற்கு பின், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் அரைசதம் (மொத்தம் 5 போட்டியில், 82 ரன்கள்) அடித்தார் ரோகித் சர்மா. ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகள் என, மொத்தம் 100க்கும் அதிகமான இன்னிங்சில் விளையாட வாய்ப்பு பெற்றது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா ஒருவராகத் தான் இருக்கும். அப்படி இருந்தும் சொதப்பிக் கொண்டு தான் உள்ளார்.

மாற்றம் தேவை:

தோனியை பொறுத்தவரை சரியான வீரர்கள் தேர்வு மற்றும் நிலைமைக்கு ஏற்ப பவுலர்களை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஹர்பஜனை தேர்வு செய்ய தவறினார். தவிர, இப்போட்டியில் துவக்க கட்டத்தில் ஸ்பின்னர்களை பயன்படுத்த தவறியதால், அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. 

விராத் கோஹ்லி இளம் வீரர் என்பதால், இன்னும் சில ஆண்டுகள் கேப்டனாக தோனியை தொடரச் செய்யலாம். அதேநேரம், தமிழகத்தின் முரளி விஜய், ரகானே உள்ளிட்டவர்களை சேர்க்கலாம். இந்த மாற்றங்களை எவ்வளவு சீக்கிரம் செய்கின்றனர் என்பதைப் பொறுத்து தான் இந்திய அணியின் எதிர்காலம் உள்ளது.

 தோனியே காரணம்

முன்னாள் வீரர் சேட்டன் சர்மா கூறுகையில்,"" என்னைப் பொறுத்தவரை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் போனததற்கு, ஒட்டு மொத்த இந்திய அணியை குறை சொல்ல கூடாது.தோனி மட்டுமே இதற்கு காரணம். 

இவர் ஒருவரே, இதற்கு பொறுப்பாவார். மழை மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும். முக்கியமான போட்டியில் ஹர்பஜன் சிங்கை களமிறக்காதது அதிர்ச்சி அளித்தது. அணியில் இருந்து இவரை விலக்கி இருக்கக்கூடாது,'' என்றார்.

0 comments:

Post a Comment