சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கோப்பையை வெல்வது யார்?


தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் எது என்பது தெரிந்து விட்டது. 

முதலாவது அரை இறுதியில் வெற்றி பெற்ற லயன்ஸ் அணியும், நேற்று செஞ்சூரியனில் நடந்த 2-வது அரைஇறுதியில் வெற்றி பெற்ற சிட்னி சிக்சர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சிட்னி வீரர்களின் ஆட்டம் அபாரமாக இருந்தது.

முதலில் ஆடிய டைட்டன்ஸ் வீரர்கள் சிட்னி பவுலர்களின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்கள். இதனால் 82 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்பிறகு 6-வது விக்கெட்டுக்கு வந்த டேவிட் வைஸ், டேவிட்சுடன் சேர்ந்து சிக்சரும், பவுண்டரியும் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டார். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் யூட்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. வைஸ் 61 ரன்களும், டேவிட்ஸ் 59 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய சிட்னி வீரர்களின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. லம்ப் 33 ரன்களும், ஓகீலே 32 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பிராட்ஹேடின் 3 ரன்னிலும், மேடின்சன் 20 ரன்னிலும், ஸ்டீவன் சுமித் 3 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் அணி சரிவுக்கு உள்ளானது. 

அதன்பிறகு ஹென் ரிக்ஸ் 27 ரன்கள் எடுத்து அணிக்கு நம்பிக்கை யூட்டினார். வெற்றியை நிர்ணயிக்க கடைசி 2 ஓவர் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. கடைசி 2 ஓவர்களில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19-வது ஓவரில் ஒரு சிக்சர் உள்பட 11 ரன் கள் எடுத்தனர். இதனால் 20-வது ஓவரில் 8 ரன்களே தேவைப்பட்டது. இதில் 5 பந்துகளில் 7 ரன் எடுத்ததால் ஸ்கோர் சமநிலைக்கு வந்தது. 

கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை எதிர்கொண்ட கம்மின்ஸ் பந்தை அடிக்காமல் விட்டு விட்டார். பைஸ் முறையில் கம்மின்ஸ் ஒரு ரன் எடுக்க ஓடினார். அதற்குள் விக்கெட் கீப்பர் குன் தன் கையில் இருந்த பந்தை ரன்அவுட் ஆக்க வீசினார். 

ஆனால் ரன்அவுட் ஆக்க தவறியதால் சிட்னி அணி வெற்றிக்கான ரன்னை எடுத்தது. சிட்னி கிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 

நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜோகனஸ் பர்க்கில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவது யார்? என்ற பரபரப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நாளை இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியை ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக பார்க்கலாம்.

0 comments:

Post a Comment