அரையிறுதியை உறுதி செய்யுமா டில்லி?


சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்று டில்லி டேர்டெவில்ஸ், டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் டில்லி அணி அரையிறுதியை உறுதி செய்யலாம்.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. செஞ்சுரியனில் இன்று நடக்கவுள்ள "ஏ' பிரிவு லீக் போட்டியில் டில்லி, டைட்டன்ஸ்(தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதுகின்றன.

சேவக் ஆதிக்கம்:

டில்லி அணி சேவக்கை தான் பெரிதும் நம்பி உள்ளது. பெர்த் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இவர் அதிரடியாக அரைசதம் கடந்து வெற்றிக்கு கைகொடுத்தார். கேப்டன் ஜெயவர்தனா பொறுப்புணர்ந்து ரன் சேர்க்க வேண்டும். பீட்டர்சன், ராஸ் டெய்லர், உன்முக்த் சந்த் தங்களது ரன் வேட்டையை தொடர்ந்தால் நல்லது. பந்துவீச்சில் மார்னே மார்கல், "ஆல்-ரவுண்டர்' அகார்கர், இர்பான் பதான் அசத்த வேண்டும். 

ருடால்ப் நம்பிக்கை:

 அரையிறுதி வாய்ப்பை பெற டைட்டன்ஸ் அணியும் வெற்றிக்காக போராடும். ருடால்ப், டேவிட்ஸ் ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுக்கலாம். கோல்கட்டா அணிக்கு எதிரான(4 ஓவரில், 52 ரன்கள்) போட்டியில் மோசமாக பந்துவீசினார் தாமஸ். இன்றைய போட்டியில் இவர் திறமையை வெளிப்படுத்த வேண்டும். 


சிக்கல் வருமா

இன்று "ஏ' பிரிவில் நடக்கும், லீக் போட்டிகளில் பங்கேற்றும் நான்கு அணிகளில், மூன்று அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்புள்ளது.

அதாவது, டில்லி, டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி நேரடியாக அரையிறுதிக்கு செல்லும். ஒருவேளை டில்லி தோற்றால் 10 புள்ளி, டைட்டன்ஸ் வீழ்ந்தால் 8 புள்ளியுடன் நீடிக்கும். 

* இந்நிலையில் பெர்த் அணிக்கு எதிரான போட்டியில், ஆக்லாந்து தோற்கும்பட்சத்தில், இரு அணிகளும் தலா 6 புள்ளியுடன் வெளியேறும். அரையிறுதி வாய்ப்பு டில்லி, டைட்டன்ஸ் அணிகளுக்கு கிடைக்கும்.

* மாறாக, பெர்த் தோற்றால், ஆக்லாந்து, டில்லி அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்று, அரையிறுதிக்கு செல்லும். பெர்த், டைட்டன்ஸ் அணிகள் வெளியேறும். 

* டைட்டன்ஸ் அரையிறுதிக்கு சென்று, டில்லி, ஆக்லாந்து அணிகள் சம புள்ளியுடன் (10) இருந்தால், "ரன்ரேட்' அடிப்படையில் ஏதாவது ஒரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அசத்துமா ஆக்லாந்து

செஞ்சுரியன்: இன்று "ஏ' பிரிவில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில், ஆக்லாந்து, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த பெர்த் அணி, வெற்றியுடன் நாடுதிரும்ப முயற்சிக்கும். கேப்டன் ஹாக்கின்சின் ஆக்லாந்து அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றால், டில்லி-டைட்டன்ஸ் அணிக்கு இடையிலான போட்டியின் முடிவை பொறுத்து, ஆக்லாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் இரு அணிகளும் வெற்றிக்கு போராட தயாராக உள்ளதால், கடும் போட்டியை காணலாம்.

0 comments:

Post a Comment