சேவக்-காம்பிர் நேருக்குநேர் மோதல்


சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' லீக் போட்டியில் இன்று காம்பிர் தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. டில்லி சார்பில் சேவக் களமிறங்குவதால், அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் பிரதான சுற்று இன்று துவங்குகிறது. இரவு நடக்கும் லீக் போட்டியில் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, ஜெயவர்தனாவின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை சந்திக்கிறது. 

காம்பிர் அபாரம்:

சமீப காலமாக இந்தியாவுக்காக சொதப்பும் காம்பிர், கோல்கட்டா அணிக்காக அசத்துவது ஆச்சரியமான விஷயம். கோல்கட்டா அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து, பேட்டிங்கில் மட்டுமன்றி அணியின் வெற்றிக்குத் தேவையான திட்டங்களையும் சரியாக வகுக்கிறார். 

இவருக்கு தென் ஆப்ரிக்க "ஆல் ரவுண்டர்' காலிஸ், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர். தவிர, மனோஜ் திவாரி, யூசுப் பதானும் பேட்டிங்கில் கைகொடுக்கின்றனர். சென்னைக்கு எதிரான பைனலில் 48 பந்தில் 89 ரன்கள் எடுத்த, மன்விந்தர் பிஸ்லாவும் அதிரடியை தொடரலாம்.

பாலாஜி நம்பிக்கை:

வேகப்பந்து வீச்சில் பிரட் லீ, காலிஸ் ஆகியோருடன் பாலாஜியின் துல்லியமான கடைசி நேர பவுலிங்கில் அணிக்கு வெற்றி தரலாம். ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன், மீண்டும் பந்தை சுழற்ற காத்திருக்கிறார். 

சேவக் தயார்:

டில்லி அணிக்கு இம்முறை கேப்டன் பொறுப்பை, இலங்கையின் ஜெயவர்தனா ஏற்றுள்ளார். இதனால், சேவக் பேட்டிங்கில் வேகமாக ரன்கள் சேர்ப்பார் எனத் தெரிகிறது. பீட்டர்சன், ராஸ் டெய்லர், வார்னரும் அணியில் உள்ளது கூடுதல் பலம். தவிர, உன்முக்த் சந்த், இர்பான் பதான், நமன் ஓஜாவும் உள்ளனர்.

மார்கல் மிரட்டல்:

தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் டில்லி அணியின் பவுலிங் சிறப்பாக இருக்கும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் மார்னே மார்கல், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், அகார்கர் ஆகியோர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பது உறுதி. சுழலில் பவான் நேகி நம்பிக்கை தரலாம்.

வெற்றி யாருக்கு:

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் நான்கு போட்டிகளில் மட்டுமே பங்கேற்கும் என்பதால், தொடரை வெற்றியுடன் துவக்குவது, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை எளிதாக்கும். இதனால் இரு அணிகளும் களத்தில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றன.

யார் ஆதிக்கம்

கோல்கட்டா, டில்லி அணிகள் ஐ.பி.எல்., தொடரில் 9 முறை மோதியுள்ளன. இதில் டில்லி அணி 4ல் வென்றது. கோல்கட்டா அணி 5 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.
* சாம்பியன்ஸ் லீக் தொடரில் இவ்விரு அணிகள் மோதுவது இதுவே முதன் முறை.


டைட்டன்ஸ்-பெர்த் பலப்பரீட்சை

செஞ்சுரியன்: இன்று நடக்கும் மற்றொரு மோதலில் டைட்டன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தென் ஆப்ரிக்காவில் நடந்த "டுவென்டி-20' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணி டைட்டன்ஸ். அணியின் கேப்டன் ஜார்ஸ்வெல்டு, பெகர்டியன், ருடால்ப், வான் டர் மெர்வி ஆகியோர் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன், அசத்த முயற்சிக்கலாம்.

ஆஸ்திரேலியாவில் நடந்த "பிக்-பாஷ்' தொடரில் இரண்டாவது இடம் பெற்ற அணி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ். தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், இங்கிலாந்தின் கோலிங்வுட்டுடன் ஷான் மார்ஷ், மிட்சல் மார்ஷ் சகோதரர்கள், கேப்டன் மார்கஸ் நார்த்துக்கு உதவ தயாராக உள்ளனர். பவுலிங்கில் ரிம்மிங்கடன், மெனியே, அனுபவ பிராட் ஹாக் இருப்பது பலம்.

0 comments:

Post a Comment