கேப்டன் தோனிக்கு கோஹ்லி ஆதரவு


தொடர்ந்து எட்டு டெஸ்டில் தோற்றதால், கேப்டன் தோனியை குறை சொல்லக் கூடாது. ஏனெனில், இவரது தலைமையில் தான் இரண்டு உலக கோப்பை வென்றோம், டெஸ்டில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினோம்,'' என, இந்திய அணியின் விராத் கோஹ்லி தெரிவித்தார்.

இந்தியா வரும் இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ., 15ல் ஆமதாபாத்தில் துவங்குகிறது. 

விராத் கோஹ்லி கூறியது:

பொதுவாக சொந்த மண்ணில் விளையாடும் அணிகள், இங்குள்ள சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்ற போது, பயிற்சி போட்டிக்காக எங்களுக்கு சமதளமான ஆடுகளங்கள் தான் தரப்பட்டது. ஆனால், டெஸ்ட் போட்டியின் போது புற்கள் அதிகமாக இருந்த,வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடினோம். 

மற்றவர்கள் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என நினைத்தால், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் ஒரே மாதிரியான ஆடுகளத்தை தந்திருக்கலாமே. பயிற்சிக்கு குறைந்த நாட்களே இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். இப்போது சுழலுக்கு சாதகமாக ஆடுகளத்தில், திடீரென விளையாடும் போது தான் அவர்களுக்கு சிரமம் தெரியவரும்.

பீட்டர்சனுக்கு நெருக்கடி:

இந்தியா வரும் இங்கிலாந்து அணியின் பீட்டர்சனுக்கு, ரன்கள் சேர்க்க வேண்டிய நெருக்கடி அதிகம் இருக்கும். சுழற்பந்து வீச்சை சமாளித்தாலும், இது எளிதாக இருக்காது. 

யாரும் இல்லை:

உலகில் எந்த வீரரும் "பவுன்சராக' வரும் பந்துகளை சரியாக எதிர்கொள்ள முடியாது. இந்திய வீரர்கள் "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் அவுட்டாகின்றனர் என்பது தவறு. அப்படி என்றால் சச்சின், டிராவிட், லட்சுமண் எல்லாம் எப்படி ரன்கள் சேர்த்தனர். சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் இந்த பந்துகளில் அதிகளவில் யாரும் அவுட்டாகவில்லை. 

தோனிக்கு பாராட்டு:

இந்திய கேப்டன் தோனி சிறப்பாக செயல்படுகிறார். தொடர்ந்து 8 டெஸ்டில் தோற்றதற்காக, அவரை குற்றச் சொல்லக் கூடாது. இவரது தலைமையில் தான் இந்திய அணி இரண்டு உலக கோப்பை (2007, 2011) வென்றது. டெஸ்ட் தரவரிசையில் "நம்பர்-1' இடத்துக்கு சென்றதை மறக்கக் கூடாது.
இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

0 comments:

Post a Comment