டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் கடைசி "சூப்பர்-8 போட்டியில், இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் "சூப்பர்-8 சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இன்று நடக்கும் கடைசி போட்டியில் "பிரிவு-2 ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தென் ஆப்ரிக்கவை சந்திக்கிறது.
கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கும் இந்திய அணியின் ஆட்டம் நிலையில்லாமல் உள்ளது. ஒரு போட்டியில் எழுச்சி பெற்றால், அடுத்த போட்டியில் ஒட்டுமொத்தமாக சொதப்புகின்றனர். "சூப்பர்-8 சுற்றில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுமோசமாக வீழ்ந்தது இந்தியா.
அடுத்து பாகிஸ்தான் அணியை புரட்டி எடுத்தது அபார வெற்றி பெற்றது. இந்த உற்சாகத்தில், இன்றும் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அணியின் பேட்டிங்கில் சேவக் மீண்டும் திரும்பியது பலம். காம்பிர் தேவையில்லாமல் விக்கெட்டை இழப்பது வருத்தம்.
"மிடில் ஆர்டரில் வீரர் விராத் கோஹ்லி மீண்டும் "மேட்ச் வின்னராக ஜொலிக்க வேண்டும். இவருடன் யுவராஜ் சிங், ரெய்னா மீண்டும் கைகொடுக்கும் பட்சத்தில், நல்ல ஸ்கோரை எடுக்கலாம். சமீபகாலமாக "டுவென்டி-20 போட்டி என்பதை மறந்து, கேப்டன் தோனி அதிகமாக பந்துகளை வீணடிக்கிறார். இவர் அதிரடி ஆட்டத்துக்கு மாற வேண்டும்.
நான்கு பவுலர்கள்:
இந்திய அணியின் பவுலிங்கில் யார், யார் இடம் பெறுவர் என்பது கடைசி நேரத்தில் தான் தெரியவரும். இருப்பினும், "சீனியர் ஜாகிர் கானுடன், கடைசி நேர ஓவர்களில் கலக்கும் பாலாஜி இடம் பெறலாம்.
தென் ஆப்ரிக்க அணியினர் சுழலுக்கு தடுமாறுவர் என்பதால் அஷ்வினுடன், ஹர்பஜன் சிங் மீண்டும் களம் காணலாம்.
டுமினி பலம்:
துவக்க வீரர் லீவி, ஆம்லா, காலிஸ் ஆகியோர் சுத்தமாக "பார்மில் இல்லாதது பலவீனம் தான். டுமினி (4 போட்டி, 90 ரன்கள்), பெஹர்டியன் இருவரும் "மிடில் ஆர்டரில் தாக்குப் பிடிப்பது கேப்டன் டிவிலியர்சுக்கு ஆறுதலான விஷயம். நான்கு போட்டிகளில் பங்கேற்றுவிட்ட நிலையில், அணியின் "டாப் ஆர்டர் வீரர்கள் ஒருவர் கூட மொத்தம் 100 ரன்கள் கூட எடுக்காதது ஏமாற்றம் தான். கடைசி நேரத்தில் ராபின் பீட்டர்சன் அதிரடியாக ரன் சேர்க்கலாம்.
ஸ்டைன் மிரட்டல்:
பவுலிங்கைப் பொறுத்தவரை ஸ்டைன், மார்னே மார்கல், பார்னல் என, வேகப்பந்து "வேதாளங்கள் மிரட்ட காத்திருக்கின்றனர். சுழலில் ராபின் பீட்டர்சன், ஜோகன் போத்தா ஆகியோர் உள்ளது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
அரையிறுதி வாய்ப்பு:
இன்று இந்திய அணி சிறப்பான வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை அதிகரிக்கலாம். அதேநேரம், இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து, பலம், பலவீனங்களை நன்கு அறிந்த கிறிஸ்டன் ஆலோசனை, தென் ஆப்ரிக்க அணிக்கு கைகொடுக்கலாம்.
யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்
"சூப்பர்-8 சுற்றின் இன்றைய போட்டியின் முடிவுகளைப் பொறுத்து, "பிரிவு-2ல் உள்ள நான்கு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.
இதன்படி, இன்று நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தானை, ஆஸ்திரேலியா வென்றால் (6 புள்ளி), நேரடியாக அரையிறுதிக்கு செல்லும். ஒரு வேளை பாகிஸ்தான் அணி பெரியளவில் வெற்றி பெற்றால், 4 புள்ளியுடன் அதிக "ரன்ரேட்டும் கிடைக்கும்.
* இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை அதிக ரன்கள் அல்லது அதிக பந்துகள் மீதமுள்ள நிலையில் வென்றால், பாகிஸ்தானை விட அதிக "ரன்ரேட் பெற்று
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
* மாறாக, இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வென்றால், ஆஸ்திரேலிய அணியுடன் சேர்த்து தலா 3 புள்ளிகள் பெற்றிருக்கும். அப்போது "ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
* அதேநேரம், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் வெல்லும் பட்சத்தில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் தலா 2 புள்ளி பெற்றிருக்கும். அப்போது "ரன்ரேட் அடிப்படையில் ஏதாவது ஒரு அணி, ஆஸ்திரேலியாவுடன் அரையிறுதிக்கு செல்லும்.
வரலாறு திரும்புமா
கடந்த 2007 உலக கோப்பை "சூப்பர்-8 சுற்றில், முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா, பின் இங்கிலாந்தை வென்றது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது.
இதில், இந்திய அணி நிர்ணயித்த 154 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி, 116 ரன்னுக்கு சுருண்டு, தொடரில் இருந்து வெளியேறியது. இந்தியா அரையிறுதிக்கு சென்றது.
இப்போது மீண்டும், முதல் போட்டியில் தோற்ற இந்தியா, பின் பாகிஸ்தானை வென்றது. இன்று தென் ஆப்ரிக்காவை மீண்டும் வென்று அரையிறுதிக்கு செல்லும் என நம்பப்படுகிறது.
மழை வருமா
இன்று போட்டி நடக்கும் கொழும்புவில், வெப்பநிலை அதிகபட்சம் 31, குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் இருக்கும். மழை வர 20 சதவீதம் தான் வாய்ப்புள்ளது.
ஆடுகளத்தை பொறுத்து...
இன்றைய போட்டியில் விளையாடும் லெவன் குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" அணியில் இடம் பெறும் வீரர்களை இப்போதே கூறுவது கடினம். முதல் போட்டி முடிந்த பின் ஆடுகளம் எப்படி உள்ளது எனப் பார்த்த பின் தான், வீரர்கள் தேர்வு செய்யப்படுவர், என்றார்.
இன்னும் முடியவில்லை
தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் கூறுகையில்,"" அரையிறுதி வாய்ப்பு எங்களுக்கு முடிந்து விடவில்லை. அப்படி எளிதாக வெளியேறும் அணி நாங்கள் அல்ல. இன்றைய போட்டியில் எப்படியும் மீண்டு வந்து சிறப்பாக செயல்படுவோம், என்றார்.
0 comments:
Post a Comment