சென்னை கிங்ஸ் இக்கட்டான நிலையில் மும்பையுடன் மோதல்


சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், "நடப்பு சாம்பியன்' மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளும் வெற்றியை நோக்கி களம் காணுகின்றன.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் இன்றைய "பி' பிரிவு முக்கிய போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் இருந்து ஏற்கனவே சிட்னி சிக்சர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நான்கு அணிகள் போட்டியிடுகின்றன. 

கடந்த 2010ல் ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன் லீக் தொடரில் கோப்பை வென்றது தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் மீண்டும் சாம்பியன் என, தொடர்ந்து அசத்திய இந்த அணி, இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தடுமாறுகிறது. 

தொடரின் முதல் இரு லீக் போட்டியில் சிட்னி மற்றும் லயன்ஸ் அணிகளுக்கு எதிரான தோல்வியால், அணியின் அரையிறுதி வாய்ப்பு குறைந்துள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் அதிசயங்கள் நிகழ்த்தினால் மட்டுமே, அரையிறுதி குறித்து யோசிக்கலாம். 

பேட்டிங் ஏமாற்றம்:

சென்னை அணிக்கு பேட்டிங்கில் முதல் போட்டியில் ரெய்னா, டுபிளசி மட்டும் சிறப்பாக விளையாடினர். மற்றவர்கள் நன்றாக ரன்கள் சேர்க்கத் துவங்குகின்றனர். ஆனால், தொடர்ந்து களத்தில் நிலைக்க மறுப்பதால், அணியும் தடுமாறுகிறது. 

துவக்க வீரர் முரளி விஜய், கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா ஆகியோருடன் மைக்கேல் ஹசியை மீண்டும் களமிறக்கிப் பார்க்கலாம்.

பவுலிங் சொதப்பல்:

அணியின் பவுலிங் தான் மிகவும் சொதப்பலாக உள்ளது. முதல் போட்டியில் 185, அடுத்து 159 ரன்கள் என விட்டுக்கொடுத்தனர். போலிஞ்சர் மட்டும் சற்று ஆறுதல் தருகிறார். மற்றபடி ஹில்பெனாஸ் விக்கெட் வீழ்த்த தடுமாறுவது பலவீனம் தான். கடந்த இரு போட்டிகளில் ஏமாற்றிய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினுக்குப் பதில் இன்று ஜகாதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. 

மும்பை பரிதாபம்:

"நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய மும்பை அணி, முதல் போட்டியில் லயன்சிடம் வீழ்ந்தது. யார்க்ஷயருடன் நல்ல நிலையில் இருந்த போது, மழை வந்துவிட எல்லாம் வீணாக போனது. சீனியர் சச்சின் பேட்டிங்கில் தொடர்ந்து ஏமாற்றம் தருகிறார். டுவைன் ஸ்மித், போலார்டு மட்டும் சிறப்பான ஆட்டத்தை தருகின்றனர். ரோகித் சர்மா பந்துகளை வீணடிப்பது நீடிக்கிறது.

எழுச்சி பெறுவாரா:

வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில், மலிங்கா அதிக விக்கெட் முடியாமல் தடுமாறுகிறார். இன்று இவர் எழுச்சி பெற்றால், சென்னை பாடு திண்டாட்டம் தான். தவிர, மிட்சல் ஜான்சன், சுழலில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா ஆகியோரும் இன்று கைகொடுக்க வேண்டும்.
வெளியேறுவது யார்:

இத்தொடரில் இரு போட்டிகளில் பங்கேற்றுள்ள மும்பை அணி 2 புள்ளியும், சென்னை புள்ளிகள் எதுவும் பெறாமலும் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்கும் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும் என்பதால், களத்தில் கடும் போட்டி காத்திருக்கிறது.

எல்லாம் "சிங்கங்கள்' கையில்...

என்ன தான் மும்பை, சென்னை அணிகள் வெற்றிக்கு போராடினாலும், இந்த அணிகளின் தலைவிதி லயன்ஸ் (சிங்கங்கள்) அணியின் கையில் தான் உள்ளது. 

* ஏனெனில், ஏற்கனவே இரு போட்டியில் வென்றுள்ள லயன்ஸ், இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் யார்க்ஷயரை வென்றால், 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். சென்னை, மும்பை, யார்க்ஷயர் அணிகள் வெளியேறும்.

* அதே நேரம், லயன்ஸ், மும்பை அணிகள் இன்று தோற்கும் பட்சத்தில், யார்க்ஷயர் 6, சென்னை 4 புள்ளிகள் பெறும். இந்த இரு அணிகள் மோதும் (அக்., 22) லீக் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு செல்லும்.

* மாறாக, இன்று மும்பை, யார்க்ஷயர் வென்றால் இரு அணிகளும் தலா, 6 புள்ளி பெறும். சென்னை வெளியேறும். 

அக்., 22ல் நடக்கும் தங்களது கடைசி லீக் (மும்பை-சிட்னி, சென்னை-யார்க்ஷயர்) போட்டிகளில் வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். 

ஒருவேளை, இதில் மும்பை, யார்க்ஷயர் என இரு அணியும் வெற்றிபெற்றால், "ரன்ரேட்' அடிப்படையில் ஒரு அணி முடிவாகும். இதில், தற்போதைய நிலையில் மும்பை அணிக்கு அதிக வாய்ப்புள்ளது. 

தோல்வி அதிகம்

சென்னை, மும்பை அணிகள் இதுவரை ஐ.பி.எல்., தொடரில் 11 போட்டிகளில் மோதின. இதில் 6ல் தோற்ற சென்னை அணி, 5 போட்டியில் மட்டும் வென்றது.

* சாம்பியன்ஸ் லீக் தொடரில் இரு அணிகள் மோதிய, 2011 போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

மழை வருமா

போட்டி நடக்கும் ஜோகனஸ்பர்க்கில் இன்று இடியுடன் கூடிய மழை வர 90 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக சென்னை, மும்பைக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டால், சென்னை அணி "அவுட்' தான். 

0 comments:

Post a Comment