இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. இவ்விரு அணிகளும் வரும் டிச., 30ம் தேதி சென்னையில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.
கடந்த 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. பல்வேறு நாடுகள் பங்கேற்ற தொடரில் மட்டும் கலந்து கொண்டன.
உதாரணமாக 2011ல் மொகாலியில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) அரையிறுதியில் இரு அணிகளும் மோதின. கடைசியாக 2007ல் இந்தியா வந்த பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
மீண்டும் இரு நாடுகள் இடையிலான தொடரை நடத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதற்கு மத்திய அரசு ஒருவழியாக அனுமதி அளிக்க, பாகிஸ்தான் அணி, இந்தியா வருகிறது.
தற்போதைய இங்கிலாந்து தொடருக்கு இடையில் கிடைக்கும் ஓய்வு நாட்களில் இரு அணிகளும் 2 "டுவென்டி-20', 3 ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. அதாவது இங்கிலாந்து அணி, வரும் டிசம்பர் 22ம் தேதி வரை, நான்கு டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்கிறது.
பின், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக நாடு திரும்புகிறது. மீண்டும் 2013 ஜனவரி 6 முதல், இரண்டு பயிற்சி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இடைப்பட்ட 15 நாட்களில்(டிச., 23-ஜன.,6) தான் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் தொடர் நடக்க உள்ளது.
இத்தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நேற்று அறிவித்தது. டிச. 25ல் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் முதலாவது "டுவென்டி-20' போட்டி நடக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி டிச. 30ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. தொடர் முடிந்ததும், பாகிஸ்தான் அணி ஜன., 7ம் தேதி நாடு திரும்புகிறது.
பெங்களூருவில் ஆரம்பம்
இந்தியா-பாகிஸ்தான் தொடருக்கான அட்டவணை.
நாள் போட்டி இடம் நேரம்
டிச. 25 முதல் "டுவென்டி-20' பெங்களூரு இரவு 7 மணி
டிச. 27 2வது "டுவென்டி-20' ஆமதாபாத் இரவு 7 மணி
டிச. 30 முதல் ஒருநாள் சென்னை மதியம் 2.30 மணி
ஜன. 3 2வது ஒருநாள் கோல்கட்டா மதியம் 2.30 மணி
ஜன. 6 3வது ஒருநாள் டில்லி மதியம் 2.30 மணி
* டுவென்டி-20 போட்டிகள் இரவு 7 மணிக்கும், ஒரு நாள் போட்டிகள் மதியம் 2.30 மணிக்கும் துவங்கும்.
0 comments:
Post a Comment