சூப்பர் ஓவர் முறையில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்றது நியூசிலாந்து

இலங்கையில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர்-8 சுற்று ஆட்டம் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் சிறப்பான துவக்கம் அளித்தார். 

அவர் 14 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் சாமுவேல்ஸ் (24), பொல்லார்ட் (28) தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.3 ஓவர்களில் 139 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல், சவுதி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.    

அதன்பின்னர் 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கப்தில் 21 ரன்னும், மெக்கல்லம் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

அதற்குப் பின்னர் களமிறங்கிய கேப்டன் டெய்லர் நிலைமையை உணர்ந்து பொறுப்புடன் ஆடினார். மறுமுனையில் வந்த வீரர்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்காதபோதிலும் டெய்லர் வெற்றிக்காக தனி ஆளாகப் போராடினார். 


கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் 5 பந்துகளில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி பந்தில் 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பந்தை தட்டிவிட்டு இரண்டாவது ரன்னுக்காக ஓடியபோது பிரேஸ்வெல் ரன்அவுட் ஆனார். 

இதனால் 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுக்க, ஸ்கோர் சமனில் முடிந்தது. டெய்லர் 3 சிக்சருடன் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 



ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதற்காக சூப்பர் ஓவர் ஆட்டம் ஆடப்பட்டது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 18 ரன்கள் எடுத்தது. கேப்டன் டெய்லர் 5 பந்துகளில் 15 ரன்னும், மெக்கல்லம் ஒரு பந்தில் ஒரு ரன்னும் எடுத்தனர். 2 ரன்கள் எக்ஸ்டிரா வகையில் கிடைத்தன. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 19 ரன்கள் இலக்கு தேவைப்பட்டது. 

எனினும் அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் வெல்ல 17 ரன்கள் போதும் என அறிவிக்கப்பட்டது. எனினும், வெற்றிக்கு தேவையான 19 ரன்களையும் வெஸ்ட் இண்டீஸ் அணி 5-வது பந்திலேயே விளாசியது. கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோர் தலா ஒரு சிக்சர் அடித்தனர். நியூசிலாந்து வீரர் டிம் சவுதி சூப்பர் ஓவரில் எக்ஸ்டிரா ரன்களை வழங்கி வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு வழிவகுத்தார். 



சூப்பர்-8 சுற்றின் 3 ஆட்டங்களிலும் தோற்ற நியூசிலாந்து அணி இத்துடன் தொடரிலிருந்து வெளியேறியது. மாறாக வெற்றிபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதி வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது. அந்த அணி அடுத்ததாக நடக்க உள்ள இலங்கை-இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவை எதிர்நோக்கியுள்ளது. 

இப்போட்டியில் இங்கிலாந்து தோற்றால், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் எவ்வித சிரமமும் இன்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். மாறாக இங்கிலாந்து வெற்றிபெற்றால் தலா 2 வெற்றிகளைப் பெற்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இங்கிலாந்து அணிகளில் இரண்டு அணிகள் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பைப் பெறும்.

0 comments:

Post a Comment