கிரிக்கெட் சூதாட்டத்தில் அம்பயர்களும் ஈடுபட்ட அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இதில் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த ஆறு அம்பயர்கள் பிடிபட்டனர்.
கடந்த ஐ.பி.எல்., தொடரின் போது இந்தியாவின் ஸ்ரீவாஸ்தவ் உள்ளிட்ட ஐந்து வீரர்கள் உள்ளூர் தொடரிலும் "பிக்சிங்கில்' ஈடுபட்டதை, இந்தியா "டிவி' அம்பலப்படுத்தியது . தற்போது, மீண்டும் தனது புலனாய்வு செய்தியில் அம்பயர்களின் மோசமான செயல்பாட்டை வெளிக்கொண்டு வந்துள்ளது.
"டுவென்டி-20' உலக கோப்பை தொடரை முன்னிட்டு கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இந்த புலனாய்வு நடந்தது. இதில் பாகிஸ்தானின் நதீம் கவுரி, அனீஸ் சித்திக், வங்கதேசத்தின் நாதிர் ஷா மற்றும் இலங்கையின் காமினி திசநாயகே, மவுரிஸ் வின்ஸ்டன், சாகரா கல்லாகே ஆகிய 6 அம்பயர்கள் பிடிபட்டனர்.
இவர்கள் போட்டியின் போது ஆடுகளம், அணி குறித்த விவரம், வீரர்கள் "அவுட்' இல்லை என்றாலும் "அவுட்' கொடுப்பது, அவுட்டானால், "அவுட்' தர மறுப்பது என, பல வேலைகளை பணத்துக்காக செய்ய முன்வந்துள்ளனர்.
சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய "டுவென்டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில், அம்பயராக பங்கேற்ற சாகரா கல்லாகேயும் இதில் சிக்கினார்.
இவர், இதுவரை 4 ஒருநாள், 2 டெஸ்ட் என, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலந்து, பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டிகளுக்கு 4வது அம்பயராக இருந்துள்ளார். பல்வேறு "டுவென்டி-20' போட்டிகளிலும் அம்பயராக இருந்தார்.
சமீபத்தில் முடிந்த இலங்கை பிரிமியர் லீக் "டுவென்டி-20' தொடர் அரையிறுதி, பைனலில் ரூ. 15 ஆயிரத்துக்காக "பிக்சிங்கில்' ஈடுபட்டது தெரியவந்துள்ளது. "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய பயிற்சி போட்டியில் "பிக்சிங்' செய்துள்ளார்.
அதாவது ரூ. 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு, ஆடுகளம், "டாஸ்' விவரம், வானிலை அறிக்கை, இரு அணியிலும் விளையாடும் 11 வீரர்கள் விவரத்தை, முன்னதாகவே அளித்துள்ளார். தவிர, போட்டியில் எவ்வித பிரச்னை ஏற்பட்டாலும், மற்றவர்களை சரிக்கட்டி, விரும்பும் அணிக்கு சாதகமாக நடக்க ஒப்புக் கொண்டார்.
வீரர்களைப் போல அம்பயர்களும், இப்படி பணத்துக்காக "பிக்சிங்' செய்ய முன்வந்தது, வேலியே பயிரை மேய்ந்த கதையாகியுள்ளது.
0 comments:
Post a Comment