சென்னை சொதப்பல் கிங்ஸ்


லயன்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பெற்ற சென்னை அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அபாரமாக ஆடிய லயன்ஸ் அணி கடைசி ஓவரில் "திரில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில், நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கேப்டவுனில் நேற்று இரவு நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா), ஹைவெல்டு லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதின.

வந்தார் ஆல்பி:

சென்னை கிங்ஸ் அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. மைக்கேல் ஹசி, யோ மகேஷ் நீக்கப்பட்டு, உள்ளூர் வீரரான ஆல்பி மார்கல், விரிதிமன் சகா தேர்வு செய்யப்பட்டனர். "டாஸ் வென்ற லயன்ஸ் அணி கேப்டன் ஆல்விரோ பீட்டர்சன், "பீல்டிங் தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்:

முதலில் பேட் செய்த சென்னை கிங்ஸ் அணிக்கு டுபிளசி, முரளி விஜய் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த போது டுபிளசி (25) அவுட்டானார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (20) பெரிய அளவில் சாதிக்கவில்லை. பங்கிசோ சுழலில் முரளி விஜய் (22) வெளியேறினார்.

தோனி அபாரம்:

பின் இணைந்த கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. சிம்ஸ் பந்தில் சிக்சர் விளாசிய ஜடேஜா, டி பிரியுன் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய தோனி, மோரிஸ் பந்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்த போது ஜடேஜா (21) பெவிலியன் திரும்பினார். ஆல்பி மார்கல் (4) நிலைக்கவில்லை.

பத்ரிநாத் அதிரடி:

பின் தோனியுடன் இணைந்த பத்ரிநாத், நானஸ் பந்தில் இரண்டு சிக்சர் விளாச, ஸ்கோர் 150 ரன்களை கடந்தது. தன்விர் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற தோனி (34) அவுட்டானார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத் (27) அவுட்டாகாமல் இருந்தார். லயன்ஸ் அணி சார்பில் பங்கிசோ 2, தன்விர், நானஸ், மோரிஸ், டி பிரியுன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

போலிஞ்சர் கலக்கல்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஹைவெல்டு லயன்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. போலிஞ்சர் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் கேப்டன் ஆல்விரோ பீட்டர்சன் எல்.பி.டபிள்யு., முறையில் "டக்-அவுட் ஆனார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்த குயின்டன் டி காக் (5), இம்முறை போலிஞ்சரிடம் சரணடைந்தார்.

குலாம் அசத்தல்:

பின் இணைந்த குலாம், நீல் மெக்கன்சி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. ஆல்பி மார்கல் வீசிய 9வது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த குலாம், ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், டுபிளசி ஆகியோரது பந்தையும் விட்டுவைக்கவில்லை. டுபிளசி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட இவர் அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த போது 46 பந்தில் 64 ரன்கள் (4 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்த குலாம் அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மெக்கன்சி (33) நம்பிக்கை தந்தார்.

"திரில் வெற்றி:

"மிடில்-ஆர்டரில் களமிறங்கிய ஜீன் சிம்ஸ், கிறிஸ் மோரிஸ் ஜோடி பொறுப்பாக ஆடியது. சென்னை அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 

ஆல்பி மார்கல் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு பந்தில் சிம்ஸ் இரண்டு பவுண்டரி அடிக்க, லயன்ஸ் அணி 19.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிம்ஸ் (39), மோரிஸ் (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை லயன்ஸ் அணியின் பங்கிசோ பெற்றார்.

ஏற்கனவே மும்பை அணியை வீழ்த்திய லயன்ஸ் அணி, தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்து, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேற, அடுத்த இரண்டு போட்டியிலும் நல்ல "ரன்-ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பின், மற்ற போட்டிகளின் முடிவைப் பொறுத்து அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

50வது சிக்சர்

நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடரில் 50வது சிக்சர் அடித்த பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பெற்றார். இவர், லயன்ஸ் அணியின் கிறிஸ் மோரிஸ் வீசிய 14வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு இப்பெருமை பெற்றார். முதல் சிக்சரை டைட்டன்ஸ் அணியின் ருடோல்ப்(எதிர், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்) அடித்தார்.

உடைந்தது "பேட்

நேற்றைய போட்டியில் சென்னை கிங்ஸ் வீரர் டுபிளசியின் பேட் உடைந்தது. சோகைல் தன்விர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 4வது பந்து டுபிளசி பேட்டின் கைபிடியை பலமாக தாக்கியதால் உடைந்தது. பின் புதிய பேட்டுடன் விளையாடிய டுபிளசி ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 25 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

19வது ஓவரில் 19 ரன்கள்

நேற்று லயன்ஸ் அணியின் டிர்க் நானஸ் வீசிய 19வது ஓவரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் 19 ரன்கள் கிடைத்தது. இதனால் சென்னை அணி 150 ரன்களை எட்ட உதவியது.

1 comments: