காயத்தில் இருந்து மீண்டு, உடற்தகுதி பெற்ற சேவக், சாம்பியன்ஸ் லீக் தொடரில் டில்லி அணிக்காக முழுமையாக விளையாடுகிறார்.
இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். சமீபத்தில் முடிந்த, "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான "சூப்பர்-8' போட்டியின் போது கணுக்கால் தசையில் காயம் அடைந்தார்.
இதனால், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், டில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இவரது காயத்துக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கப்பட்டது. நாளை துவங்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரில், கோல்கட்டா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நேற்று நடந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், இத்தொடரில் முழுமையாக விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
டில்லி அணியின் அதிகாரி ஒருவர் வெளியிட்ட செய்தியில்," சேவக் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதனால், சாம்பியன்ஸ் லீக் தொடரின் அனைத்து போட்டியிலும் பங்கேற்பார்,' என்றார்.
பயிற்சியில் ஏமாற்றம்:
நேற்று சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு எதிராக நடந்த பயிற்சி போட்டியில் சேவக் களமிறங்கினார். ஜோஷ் ஹாஸ்லேவுட்டின் "யார்க்கரை' சமாளிக்க முடியாமல், சேவக் "டக்' அவுட்டாக, டில்லி அணி 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் டில்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் ஓய்வு காரணமாக துவக்க வீரர் வார்னர் பங்கேற்கவில்லை. ஆஸ்பத்திரிக்கு செல்ல இருந்த காரணத்தினால், கேப்டன் ஜெயவர்தனாவும் களமிறங்கவில்லை.
0 comments:
Post a Comment