ஐ.பி.எல்., தொடரில் இருந்து விடைபெறுகிறார் சவுரவ் கங்குலி


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, 40. ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், முதல் மூன்று ஆண்டுகள் கோல்கட்டா அணிக்காக விளையாடினார். 

2011ல் நடந்த வீரர்களுக்கான ஏலத்தில் இவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. ஒருவழியாக புனே அணி ஒப்பந்தம் செய்தது. சமீபத்திய ஐந்தாவது தொடரில் யுவராஜ் சிங் "கேன்சரால்' பாதிக்கப்பட, புனே அணியின் கேப்டன், ஆலோசகராக செயல்பட்டார். 

இத்தொடரில் புனே அணி கடைசி இடம் பிடித்து ஏமாற்றியது. இதையடுத்து கங்குலி நீக்கப்படும் நிலை ஏற்பட்டது. 

இதற்கிடையே வரும் 31ம் தேதிக்குள் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அணிகள் வெளியிட வேண்டும் என ஐ.பி.எல்., நிர்வாகம் கெடு விதித்தது. 

இதன்படி "கேன்சரில்' இருந்து மீண்ட யுவராஜை தொடர்ந்து புனே அணியில் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. இவரிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம். 

தன் மீது விருப்பம் அணி நிர்வாகம் விருப்பம் காட்டாததால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து ஓய்வு பெறுவது என கங்குலி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பயிற்சியாளர், ஆலோசகர் உள்ளிட்ட வேறு எந்த பொறுப்பையும் ஏற்க அவர் முன்வரவில்லையாம். 

திவாரிக்கு பொறுப்பு:

நேற்று அறிவிக்கப்பட்ட ரஞ்சி கோப்பை தொடருக்கான பெங்கால் அணியிலும் கங்குலி இடம் பெறவில்லை. இந்த அணியின் கேப்டனாக மனோஜ் திவாரி நியமிக்கப்பட்டார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்கால் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் (நவ. 2-5) அணியை சந்திக்கிறது. அதன்பின், பஞ்சாப் (நவ. 9-12) அணியை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட வீரர்களை, பெங்கால் கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது.

முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி இப்போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்காததால், மனோஜ் திவாரிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. விரிதிமன் சகா, அசோக் டிண்டா, லட்சுமி ரத்தன் சுக்லா, வீர் பிரதாப் சிங் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து கங்குலி கூறுகையில்,""நான் ஐ.பி.எல்., தொடரில் விளையாடவில்லை என்றால், ரஞ்சி கோப்பை போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பு இல்லை,''என்றார். 

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் துணை செயலாளர் சுஜன் முகர்ஜி கூறுகையில், ""சவுரவ் கங்குலி, முதலிரண்டு போட்டியில் விளையாட மாட்டார். தேவைப்படும் பட்சத்தில், அணியின் நிலையை கருத்தில் கொண்டு அடுத்த போட்டிகளில் விளையாடலாம்'' என்றார்.

0 comments:

Post a Comment