நாங்க தான் சிறந்த துவக்க ஜோடி - காம்பிர்


நானும் சேவக்கும் சேர்ந்து சராசரியாக 53 ரன்கள் எடுத்துள்ளோம். உலக கிரிக்கெட் அரங்கில் நாங்கதான் சிறந்த துவக்க ஜோடி,'' என, காம்பிர் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சேவக், காம்பிர். இவர்களது ஆட்டம் சமீப காலமாக மோசமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மட்டும் அடித்துள்ள சேவக், சராசரியாக 37.26 ரன்கள் தான் எடுத்துள்ளார். 

இந்த காலக்கட்டத்தில் காம்பிரை எடுத்துக் கொண்டால் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. சராசரியாக 30.31 ரன் தான் எடுத்துள்ளார். இந்நிலையில், இவர்களுக்கு பதில் உள்ளூர் போட்டிகளில் அசத்தும் ஷிகர் தவான், முரளி விஜய்க்கு வாய்ப்பு அளிக்கலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இது குறித்து காம்பிர் கூறியது: 

நானும், சேவக்கும் இணைந்து துவக்க ஜோடியாக சராசரியாக 53 ரன்கள் எடுத்துள்ளோம். உலக கிரிக்கெட் அரங்கில் இது தான் சிறந்தது என நினைக்கிறேன். சதம் அடிக்காததால் எனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ஒவ்வொரு முறையும் சதம் அடிக்க முடியாது. 

துவக்க வீரராக சிறப்பாக செயல்படுவதே முக்கியம். தென் ஆப்ரிக்காவில் ஒரு முறை 93 ரன்கள், ஆஸ்திரேலியாவில் 85 ரன்களை எடுத்துள்ளேன். அப்போது 7 அல்லது 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் எனது சதம் பற்றி அதிகம் விவாதித்திருக்க மாட்டார்கள். 

எனது பேட்டிங்கில் குறை எதுவும் இல்லை. அப்படி குறை இருந்தால், ஒரு நாள் போட்டிகளில், கடந்த 24 இன்னிங்சில் 1100 ரன்களை எடுத்திருக்க முடியாது. டெஸ்ட், "டுவென்டி-20', ஒருநாள் போட்டி ஆகிய மூன்றும் வெவ்வேறானவை. அனைத்திலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் கடினம். 

எனது தலைமையிலான கோல்கட்டா அணி ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இதற்காக எல்லா தொடர்களிலும் வெற்றி பெற முடியாது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை "பழிவாங்கும் தொடர்' என கூறுவதை ஏற்க இயலாது. ஏனெனில் கிரிக்கெட் அல்லது எந்த ஒரு விளையாட்டிலும் பழிவாங்குதல் என்ற வார்த்தைக்கு இடமில்லை. 

இவ்வாறு காம்பிர் கூறினார். 

அக்ரம் ஆதரவு

இந்திய அணியில் சேவக், காம்பிருக்கு மாற்றாக வேறு துவக்க வீரர்கள் இல்லை என, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அக்ரம் குறிப்பிட்டார். 

இவர் கூறுகையில்,""டிராவிட், லட்சுமண் ஓய்வு பெற்ற நிலையில் "மிடில்-ஆர்டரில்' போதிய அனுபவம் இல்லை. இந்த நேரத்தில் துவக்க ஜோடியை மாற்றுவது சரியாக இருக்காது. 

இவர்களுக்கு நிகரான வீரர்களும் இந்திய அணியில் இல்லை. அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இத்தொடரில் சேவக், காம்பிர் இழந்த "பார்மை' மீட்க வேண்டும்,''என்றார். 

0 comments:

Post a Comment