2020 ஒலிம்பிக்கில் 20 பதக்கம் - சச்சின் அதிரடி


இந்திய விளையாட்டு அரங்கில் திட்டமிட்டு மாற்றங்களை செய்தால், 2020 ஒலிம்பிக்கில் 20 பதக்கங்களை கைப்பற்றலாம்,''என, சச்சின் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

 இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரர் சச்சின். சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இவர், விளையாட்டில் இந்தியா முன்னேற்றம் அடைய வகுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். இதில், சச்சின் கூறியிருப்பதாவது: 

பாடத்திட்டத்தில் விளையாட்டையும் சேர்க்க வேண்டும். ஹாக்கியில் தயான்சந்த் நிகழ்த்திய சாதனைகள் பற்றி படிக்கும் போது, விளையாட்டின் மீதான மோகம் அதிகரிக்கும். 
சமீபத்திய லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் வென்றது. தொடர்ந்து சில அடிப்படை மாற்றங்களை செய்தால், 2014 ல் 12 பதக்கங்கள் அல்லது 2020 ஒலிம்பிக்கில் 20 பதக்கங்களை கைப்பற்றலாம். இது ஒன்றும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது அல்ல. திட்டமிட்டு செயல்பட்டால், நிச்சயமாக இலக்கை எட்டலாம். 

கிரிக்கெட் வளர்ச்சிக்காக பெங்களூருவில் தேசிய பயிற்சி அகாடமி துவங்கப்பட்டது. இது, வீரர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது. இதே போல அரியானாவில் குத்துச்சண்டை, மல்யுத்த போட்டிகளுக்கு என்று தனியாக பயிற்சி மையங்களை அமைக்கலாம். 

அமெரிக்க பல்கலை., கல்லூரிகளில் விளையாட்டை மேம்படுத்த சிறப்பான திட்டம் உள்ளது. இதன் மூலம் நிறைய ஒலிம்பிக் வீரர்கள் உருவாகின்றனர். இதனை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவிலும் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதே எனது கனவு. 

பெரும்பாலான இளைஞர்களிடம் "மொபைல் போன்' உள்ளது. இதன் மூலம் விளையாட்டு திறனை கண்டறியலாம். தங்களது சாதனைகள் குறித்து எஸ்.எம்.எஸ்., அல்லது எம்.எம்.எஸ்., அனுப்பலாம். 

இவற்றை நிபுணர்கள் ஆய்வு செய்து, திறமையானவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கலாம். இவ்வாறு சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment