சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாமா என்பது குறித்து, அடுத்த மாதம் சச்சின் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறார். இதுவரை 190 டெஸ்ட் (15,533 ரன்கள், 51 சதம்), 463 ஒருநாள் (18,426 ரன்கள், 49 சதம்) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் மொத்தம் 100 சதம் அடித்து சாதித்துள்ளார்.
சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்சிலும் "போல்டானார்'. இதையடுத்து, சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதுகுறித்து சச்சின் கூறியது:
எனக்கு இப்போது, 39 வயதாகி விட்டது. இன்னும் அதிக நாட்கள் கிரிக்கெட் விளையாட முடியும் என்று என்று நினைக்கவில்லை. ஆனாலும், எனது மனம் மற்றும் உடல் ஒத்துழைப்பை பொறுத்து, ஓய்வு குறித்து முடிவெடுப்பேன்.
இத்தனை வயது வரை நான் விளையாடுவேன் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதேநேரம், அணிக்கு தேவையானதை என்னால் எப்போது வழங்க முடியாமல் போகிறதோ, அப்போதே, போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து யோசிக்க துவங்கிவிடுவேன்.
கடந்த ஆண்டு உலக கோப்பை வென்றதை மறக்க முடியாது. கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது பெருமைப்படத்தக்க விஷயம். என்னால் எப்போது சரியாக விளையாட முடியவில்லையோ, அன்று கிரிக்கெட்டை நிறுத்தி விடுவேன்.
நேரம் வரவில்லை:
எந்த ஒரு விஷயத்திலும் எனது மனம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு தான் நடந்து வருகிறேன். துவக்கத்தில் இருந்தே இப்படித்தான். இதை நான் பின்பற்றாமல் இருந்திருந்தால், உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற 22 ஆண்டுகள் காத்திருக்க முடியாது.
தற்போது, எனது ஓய்வு விஷயமும் இதயம் சொல்கிறபடி தான் நடக்கும். இதற்கான தேவை இப்போது வரவில்லை. அடுத்த மாதம் இங்கிலாந்து தொடர் நடக்கும் போது, ஓய்வு குறித்து முடிவு செய்வேன்.
இயற்கை தான்:
மூன்று முறை இயல்பாக "போல்டாகி' விட்டேன். அதேநேரம், 25 வயதில் இப்படி நடந்திருந்தால் யாரும் கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். இப்போது 39 வயது என்பதால் தான் இப்படி கேட்கின்றனர்.
இது இயற்கை தான். மொத்தத்தில், "அவுட்' ஆனது "அவுட்' தான். அடுத்து வரும் போட்டிகளில், எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்று தான் திட்டமிட்டு வருகிறேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.
கும்ளே விருப்பம்
கும்ளே கூறுகையில்,"" எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும், ஓய்வு பெறுவது என்பது கடினமானது. சச்சின் இதுகுறித்து பேசத் துவங்கியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் இவர் இல்லாத இந்திய அணியை நினைத்து பார்க்கவே முடியவில்லை. அணியில் சச்சின் தொடர விரும்புகிறேன்,'' என்றார்.
thank you kumble sir
ReplyDelete