ஐ.சி.சி.,யை ஏமாற்றிய இலங்கை


இங்கிலாந்துக்கு எதிரான "சூப்பர்-8' போட்டியில், இலங்கை அணியின் கேப்டனாக சங்ககரா செயல்பட்டதன் ரகசியம் இப்போது தெரியவந்துள்ளது.

நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான "சூப்பர்-8' போட்டியில், தாமதமாக பந்து வீசிய இலங்கை அணி கேப்டன் ஜெயவர்தனாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

இதனிடையே நேற்று முன்தினம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், சங்ககரா கேப்டனாக செயல்பட்டார். இதுகுறித்து சங்ககரா கூறுகையில்,""ஜெயவர்தனா தொடர்ந்து "டாஸ்' தோற்கிறார். இதனால் தான் நான் பொறுப்பேற்றேன்,'' என, சாதாரணமாக கூறினார்.

கடைசியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ஐ.சி.சி.,), இலங்கை அணி முட்டாள் ஆக்கியது இப்போது தான் தெரிகிறது. அதாவது, ஐ.சி.சி., விதிப்படி, ஒரு ஆண்டில் இரு முறை தாமதமாக வீசினால், அடுத்த ஒரு போட்டிக்கு கேப்டனுக்கு தடை விதிக்கப்படும். 

ஏற்கனவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபராதம் கட்டிய ஜெயவர்தனா, மீண்டும் தாமத ஓவர் சிக்கலில் சிக்கினால், அரையிறுதியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும். இதைத் தவிர்க்கவே, சங்ககரா கேப்டன் பொறுப்பை ஏற்றார் என்ற செய்தி இப்போது தெரியவந்துள்ளது.

"சூப்பர்' கண்டுபிடிப்பு:

இலங்கையில் இச்செயல் மற்ற அணிகளுக்கு நல்ல கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது. அதாவது, ஏதாவது ஒரு போட்டியில் அபராதம் கட்ட வேண்டிய நிலை வந்தால், அரையிறுதி போன்ற முக்கிய போட்டிகளுக்கு முன், வேறு ஒருவரை கேப்டனாக களமிறக்கி விடலாம். 

விரைவில் நடவடிக்கை:

ஏனெனில், அனைத்து போட்டியிலும் ஒருவர் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என, எந்த ஐ.சி.சி., விதியும் இல்லை. இதுகுறித்து ஐ.சி.சி., செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,"" அணிக்கு யார் கேப்டன் என்பதை, அந்தந்த கிரிக்கெட் போர்டுகள் தான் நியமிக்கின்றன. 

இவ்விஷயத்தில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இலங்கை அணியின் செயலுக்குப் பின், விரைவில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

தவறு இல்லை:

இதுகுறித்து ஜெயவர்தனா கூறுகையில்,"" ஒரு மணி நேரம், 20 நிமிடத்தில், 20 ஓவர்கள் பவுலிங் செய்வது மிகவும் கடினம். இதில் இரண்டாவது முறையாக தவறு நடந்தால், அடுத்த போட்டியில் நான் பங்கேற்க முடியாது. இதனால், சங்ககரா கேப்டனாக செயல்பட்டதில் எவ்வித தவறும் இருப்பதாக தெரியவில்லை,'' என்றார்.

0 comments:

Post a Comment