ஐ.பி.எல்., பைனலில் அவமானம்

ஐ.பி.எல்., தொடர் முடிந்த போதும், சர்ச்சைகள் தொடருகின்றன. பைனலை காண வந்த இந்திய முன்னாள் கேப்டன் நரி கான்ட்ராக்டர், மைதானத்தின் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வைத்திருந்தது போலி டிக்கெட் என்று கூறி, அவமானப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடந்தது. நவி மும்பையில் நடந்த பைனலில் சென்னை கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, கோப்பை வென்றது. இப்போட்டியை காண, டி.ஒய் பாட்டீல் மைதானத்துக்கு வந்த நரி கான்ட்ராக்டருக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் சோகத்துடன் திரும்பியுள்ளார்.

இது குறித்து இவர் கூறுகையில்,""பைனலை காண 35 கி.மீ., பயணம் செய்து வந்தேன். நுழைவு வாயிலில் நின்றவர் டிக்கெட்டுடன் "பாட்ஜ்' ஒன்றும் இருக்க வேண்டும் என்றார். எனக்கு "பாட்ஜ்' எதுவும் வழங்கப்படவில்லை.

இதனால் குழப்பம் அடைந்த நான், அப்படியே திரும்பிச் சென்றேன். இப்பிரச்னையில் வாயில்காவலரை குறை சொல்ல முடியாது. அவர் தனது கடமையை தான் செய்தார். மும்பை கிரிக்கெட் சங்கம், எங்களுக்கு போலி டிக்கெட்டுகளை எப்படி வழங்கியது?

இலவச பாஸ் வழங்கப்படாத சர்ச்சை காரணமாக, மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டிகளை காண முடியவில்லை. இதே போல பைனலை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை,''என்றார்.

புதிய பிரச்னை:

லலித் மோடி பிரச்னை ஓயாத நிலையில், நரி கான்ட்ராக்டருக்கு அனுமதி மறுத்த விவகாரம் மும்பை கிரிக்கெட் சங்கத்தில் புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் இணை செயலர் லால்சந்த் ராஜ்புட் கூறியது:

பைனலை காண 200 டிக்கெட்டுகளை மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு ஐ.பி.எல்., நிர்வாகம் வழங்கியது. இதனை போலி டிக்கெட் என்று கூறி அனுமதி மறுத்துள்ளனர். இதனால் முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

பின் ஐ.பி.எல்., தலைமை அதிகாரி சுந்தர் ராமனை நான் தொடர்பு கொண்டு, பிரச்னைக்கு தீர்வு கண்டேன். அதற்குள் கான்ட்ராக்டர் திரும்பிச் சென்று விட்டார். இது தொடர்பாக பி.சி.சி.ஐ.,க்கு கடிதம் எழுதியுள்ளோம்.

நாளை நடக்கும் பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டத்தில் கேள்வி எழுப்புவோம். வரும் காலங்களில் மும்பை கிரிக்கெட் சங்கத்துடன் சேர்ந்து தான் ஐ.பி.எல்., போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு ராஜ்புட் கூறினார்.

0 comments:

Post a Comment