ஐ.பி.எல்., "போதை': கில் எச்சரிக்கை

ஐ.பி.எல்., போட்டிகளின் போது மைதானத்தில் தாராளமாக மது பரிமாறப்படுவதற்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ். கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விளையாட்டையும் மதுவையும் ஒருபோதும் கலக்கக்கூடாது என எச்சரித்துள்ளார்.

மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நடன மங்கைகளின் ஆட்டம், மைதானத்தில் மது பரிமாறுவது, இரவில் "பார்ட்டி' என உல்லாச விஷயங்கள் ஏராளம் உள்ளன.

தவிர, கோடிக்கணக்கில் கிரிக்கெட் சூதாட்டமும் நடப்பதால், விளையாட்டு உணர்வு முற்றிலும் பாதிக்கப்படுவதாக பலரும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சமீபத்தில் டில்லி சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. மைதானத்தில் ஆபாச நடனம் மற்றும் மதுவின் போதையில் மிதப்பது போன்றவற்றுக்கு ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இக்கட்சியை சேர்ந்த ராமகாந்த் கோஸ்வாமி கூறுகையில்,""ஐ.பி.எல்., போட்டிகள் என்ற போர்வையில் மைதானத்தில் அமர்ந்தவாறு பகிரங்கமாக ரசிகர்கள் மது குடிக்கின்றனர். கிரிக்கெட் "பெட்டிங்கும்' படுஜோராக நடக்கிறது. இதற்கு போலீசாரும் துணை போகின்றனர்,'' என்றார்.

இப்பிரச்னையில் எம்.எல்.ஏ., க்களுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எஸ்.கில் கூறியது:

மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் கோபத்தில் நியாயம் உண்டு. சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டையும் மதுவையும் ஒருபோதும் கலக்கக் கூடாது. ஐ.பி.எல்., போட்டிகளின் போது மைதானத்துக்குள்ளேயே மது பரிமாறப்படுகிறது.

டில்லியில் நடந்த போட்டியில் இத்தகைய சம்பவம் அரங்கேறியது ஆச்சரியம் அளித்தது. வர்த்தக ரீதியில் செயல்படும் ஐ.பி.எல்., அமைப்பின் வருமானத்தை அதிகரிக்க, நாட்டின் மற்ற மைதானங்களிலும் மது தாராளமாக வழங்கப்படுகிறது.

மைதானங்களுக்கு சென்று சிறந்த வீரர்களின் ஆட்டத்தை பார்க்கும்படி இளைஞர்களை ஊக்கப்படுத்துகிறோம். அப்படியிருக்கையில் மதுவுக்கு எப்படி அனுமதி அளிக்கின்றனர் என்று தெரியவில்லை.

இவ்வாறு எம்.எஸ்.கில் கூறினார்.

0 comments:

Post a Comment