மின்னொளியில் டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டியை மின்னொளியில் நடத்தும் "ஐடியா'வுக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

"டுவென்டி-20' வரவை தொடர்ந்து டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டியை மீட்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போட்டிகளை இரவில் மின்னொளியில் நடத்துவது, வீரர்களுக்கு வண்ண உடை மற்றும் "பிங்க்' நிறத்திலான பந்தை பயன்படுத்துவது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,)பரிசீலித்து வருகிறது.

இதற்கு ஏற்கனவே ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆதரவு தெரிவித்து இருந்தார். தற்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்களான இன்சமாம், மொயின் கான் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இன்சமாம் கூறுகையில்,""ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகள் மின்னொளியில் நடத்தப்படும் போது, டெஸ்டிலும் மாற்றம் கொண்டு வரலாம். பகலிரவு ஆட்டமாக நடத்தும் போது, மைதானத்துக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

"டிவி' மூலம் அதிகம் பேர் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். இரவில் எத்தகைய பந்து பயன்படுத்துவது பற்றி சர்ச்சை எழலாம். இதற்கு சுமுக தீர்வு காண வேண்டும்.

பகலிரவு போட்டி, வீரர்களுக்கு வண்ண உடை போன்ற புதுமைகளை முதன் முதலில் கேரி பேக்கர் அறிமுகப்படுத்திய போது, கிரிக்கெட் அழிந்து விட்டதாக குற்றம்சாட்டினர். ஆனாலும், ஒரு நாள் போட்டி மற்றும் "டுவென்டி-20' ஆட்டங்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. டெஸ்டுக்கும் ரசிகர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஐந்து நாட்கள் போட்டியை பார்க்கும் அளவுக்கு மக்களுக்கு நேரம் தான் இல்லை,''என்றார்.


மொயின் கான் கூறுகையில்,""

டெஸ்ட் போட்டிகளில் மாற்றங்களை செய்ய கிரிக்கெட் நிர்வாகிகள் முன்வர வேண்டும். பகலிரவு ஆட்டமாக நடத்துவதில் தவறில்லை. "பிங்க்' நிற பந்துகளை பயன்படுத்துவது பற்றி அனைத்து நாடுகளின் சம்மதத்தை பெற வேண்டும்.

"டுவென்டி-20' போட்டி அதிகளவில் பிரபலமடைந்து வருவதால், டெஸ்டுக்கு போதிய "ஸ்பான்சர்கள்' கிடைப்பதில்லை. "டிவி' ஒளிபரப்பில் டெஸ்டுக்கு உரிய நேரம் ஒதுக்கும் பட்சத்தில் மாற்றங்களை துணிந்து கொண்டு வரலாம்,''என்றார்.

0 comments:

Post a Comment