சுதந்திர இந்தியாவின் சாம்பியன்

பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன் பட்டத்தை இருமுறையும், தேசிய சாம்பியன் பட்டத்தை 12 முறையும் வென்று சாதனை படைத்த இந்திய வீரர் வில்சன் ஜோன்ஸ்.

சுதந்திர இந்தியாவில் தனிநபர் போட்டியில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரரும் அவர் தான். சிறந்த வீரர் என்பது மட்டும் அல்லாது பில்லியர்ட்ஸ் சாம்பியன்கள் பலரை உருவாக்கிய பெருமையும் வில்சனையே சேரும்.

மகாராஷ்டிர மாநிலம் பூனாவில் 1922 மே 2-ம் தேதி ஆங்கிலோ- இந்தியன் தம்பதிகளுக்கு வில்சன் ஜோன்ஸ் பிறந்தார். சிறுவயதிலேயே அவரது மாமா பில்லியர்ட்ஸ் விளையாட்டை அறிமுகம் செய்து வைத்தார். மாமாவிடம் இருந்த பில்லியர்ட்ஸ் ஆர்வம் வில்சனையும் தொற்றிக் கொண்டது.

பில்லியர்ட்ஸ் ஆட்ட நுணுக்கங்களை மிகவிரைவாகக் கற்றுத் தேர்ந்த அவர், தன்னைவிட வயதில் மூத்தவர்களையும் எளிதில் தோற்கடித்தார். 1950-ம் ஆண்டு முதல்முறையாக பில்லியர்ட்ஸ் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார். 1950 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் 12 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.

ஸ்நூக்கர்ஸ் ஆட்டத்திலும் ஜொலித்த அவர் 4 முறை தேசிய ஸ்நூக்கர்ஸ் சாம்பியன் ஆனார். இது தவிர மாநில அளவில் பில்லியர்ட்ஸில் 8 முறையும், ஸ்நூக்கர்ஸில் 6 முறையும் சாம்பியன் பட்டம் வென்றார்.

தேசியப் பட்டங்களை எளிதில் வென்றாலும், சர்வதேச போட்டிகள் அவருக்கு கடும் சவாலாக அமைந்தன. 1958-ம் ஆண்டில் அவரது பல ஆண்டு கனவு நிறைவேறியது. அந்த ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச பில்லியர்ட்ஸ் சாம்பியன் போட்டியில் வென்று அவர் சாதனை படைத்தார்.

சுதந்திர இந்தியாவில் சர்வதேச அளவில் தனிநபர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 1964-ல் மீண்டும் ஒருமுறை சர்வதேச பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

மத்திய அரசு அவரது திறமையைப் பாராட்டி 1962-ல் அர்ஜுனா விருதும், 1965-ல் பத்ம ஸ்ரீ விருதும் வழங்கியது. இந்தியாவில் சிறந்த விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியா விருது 1996-ல் வழங்கப்பட்டது. 2003-ல் மாரடைப்பால் வில்சன் ஜோன்ஸ் காலமானார்.

0 comments:

Post a Comment