பரிதாப நிலையில் ஐ.பி.எல்., நட்சத்திரங்கள்

ஐ.பி.எல்., தொடரில் முரளி விஜய், நமன் ஓஜா போன்ற இளம் நட்சத்திரங்கள் அசத்திக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


இந்திய இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் ஐ.பி.எல்., அமைப்பு. ஆனால் இதில் சாதிக்கும் வீரர்களுக்கு, இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா என்றால், ஏமாற்றம் தான் பதிலாக உள்ளது.

இதற்கிடையே வரும் ஏப்., 30ல் வெஸ்ட் இண்டீசில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் துவங்குகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தோனி தலைமையிலான இதில், வழக்கம் போல காம்பிர், சேவக், ரெய்னா, யுவராஜ் சிங், ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல்., தொடரில் சாதிக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


சச்சின் விலகல்;

அதிக ரன்கள் குவித்த சச்சின் (512), உலக கோப்பை தொடரில் இருந்து, தானாகவே விலகிக்கொண்டார். கங்குலி (366), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர். அடுத்து நமன் ஓஜா (352), ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த (127*) முரளி விஜய், இதுவரை எடுத்துள்ள ரன்கள் 337. ஆனால் இந்த இளம் வீரர்களில் ஒருவர் கூட தற்போதைய "டுவென்டி-20' அணியில் இடம் பெறவில்லை.


"பினிஷிங்' உத்தப்பா:

முதல் உலக கோப்பை "டுவென்டி-20' (2007) தொடரில், இந்தியா சார்பில் முதல் அரைசதம் பதிவு செய்தவர் உத்தப்பா. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில், இந்தியா திணறிக் கொண்டிருந்த போது, களமிறங்கிய இவர், அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். தவிர, அந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் குவித்தார்.

இடையில் பிட்னஸ், பார்ம் போன்ற பிரச்னைகளால் ஒதுக்கப்பட்ட இவர், தற்போதைய ஐ.பி.எல்., தொடரில், இதுவரை 318 ரன்கள் குவித்துள்ளார். இவரது "ஸ்ட்ரைக் ரேட்' 181%. பல போட்டிகளில் கடைசி நேர அதிரடி சிக்சர்களால், தனது பெங்களூரு அணியை வெற்றிபெற வைத்துக் கொண்டுள்ளார். ஆனால் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு ரவிந்திர ஜடேஜாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.


ஓஜாவுக்கு மறுப்பு:

தற்போதைய ஐ.பி.எல்., தொடரில், அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில், முதல் இடத்தில் இருப்பவர் பிரக்யான் ஓஜா (18 விக்.,). அடுத்த இடத்தில் அமித் மிஸ்ரா (15 விக்.,) உள்ளார். இந்த இரு "ஸ்பின்னர்களுக்கும்' இந்திய அணியில் இடமில்லை.

ஹர்பஜனுடன் சேர்த்து "சுழல்' வாய்ப்பு இம்முறை பியுஸ் சாவ்லாவுக்கு (10 விக்.,) சிக்கியுள்ளது. தவிர, "ஆல் ரவுண்டர்' பணியில் அசத்தும் இர்பான் பதானுக்கும் (231 ரன்கள், 14 விக்.,) அணியில் இடமில்லை.

இப்படி அசத்திக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு எல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தோனி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீசில் மண்ணில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment