"ஹேப்பி பர்த்டே' சச்சின்!

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்று 37வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் எடுத்து வரலாறு படைத்த இவர், தொடர்ந்து பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார்.

கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்தார் சச்சின். தனது 16வது வயதில், 1989ல் இந்திய அணியில் அறிமுகமான இவர், 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், சதம் எடுத்து சாதித்துள்ளார்.

மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும், விரல் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் வரும் 25ம் தேதி நடக்க உள்ள சென்னை அணிக்கு எதிரான பைனலில் இவர் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சச்சின் அளித்த பேட்டி:

கிரிக்கெட்டில் கொண்ட தீவிர ஆர்வத்தின் காரணமாக, நன்கு அனுபவித்து விளையாடி வருகிறேன். டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, அனைத்து வகையிலான போட்டிகளிலும், அதிக ரன்கள் குவித்துள்ளேன். அதேநேரம் கேப்டன் பதவிக்காகவும் விளையாடியது இல்லை. இதற்காகவும் நான் என்னை நிரூபிக்க முயற்சித்தது இல்லை.

பெரும் சிரமம்:

எந்த ஒரு அணியும், ஒரே நாள் இரவில் சிறந்ததாக மாறிவிட முடியாது. ஒரு வீரரின் தனித்தன்மையை கண்டறிவது முதல், சிறந்த அணியை உருவாக்குவது என்பது வரை மிக முக்கியம்.

இதற்காக கடந்த மூன்றாண்டுகளாக ஒவ்வொரு நிர்வாகிகளும், பெரும் சிரமப்பட்டிருப்பர். இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்., அணியில், சிறிய மாற்றங்களைத் தவிர, பெரிய அளவில் மாற்றம் இருக்காது என நம்புகிறேன்.

கடினம் தான்:

என்னுடைய தனிப்பட்ட எண்ணம் என்னவென்றால், தற்போதுள்ள நான்கு இந்திய மற்றும் நான்கு வெளிநாட்டு வீரர்களை தொடர்ந்து வைத்திருக்க முயற்சிக்கலாம். இந்திய வீரர்களை பொறுத்தவரையில், அணி உரிமையாளர்கள் முடிவு செய்யலாம்.

இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment