சேவக் "அவுட்': முரளி விஜய் வாய்ப்பு

"டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக சேவக் நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதில், தமிழக வீரர் முரளி விஜய் வாய்ப்பு பெற்றுள்ளார்.

மூன்றாவது உலக கோப்பை "டுவென்டி-20' தொடர், வரும் ஏப். 30ல் வெஸ்ட் இண்டீசில் துவங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட, 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதில் இடம் பெற்றிருந்த சேவக்கிற்கு, ஐ.பி.எல்., தொடரின் போது மீண்டும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"" தோள்பட்டையில் காயம் அடைந்துள்ள சேவக்கிற்கு, மூன்று முதல் நான்கு வாரகால ஓய்வு தேவைப்படுகிறது.

இதனால் "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்படுகிறார். மாற்று வீரரை தேர்வு செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அனுமதி அளித்துள்ளதால், இந்திய அணியில் முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். துணைக்கேப்டனாக காம்பிர் செயல்படுவார்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் போதும் தோள்பட்டையில் காயம் அடைந்த சேவக், பாதியில் இந்தியா திரும்பினார்.


அசத்துவார் விஜய்?

தமிழக வீரர் முரளி விஜய், "டுவென்டி-20' அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது இது தான் முதல் முறை. மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இவர் அசத்தலாக விளையாடி வருகிறார்.

ராஜஸ்தானுக்கு எதிராக 57 பந்துகளில் 127 ரன்கள் விளாசிய இவர், இத்தொடரில் இதுவரை 417 ரன்கள் குவித்துள்ளார். இவரது அதிரடி, வெஸ்ட் இண்டீசிலும் தொடரும் என நம்பலாம்.

0 comments:

Post a Comment