அதிரடி தான் எனது பலம்: சேவக்

அதிரடியாக "பேட்' செய்து ரன் குவிப்பது தான் எனது பலம். எனது இயல்பான ஆட்டத்தை மாற்ற விரும்பவில்லை,'' என சேவக் தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் சேவக். இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் (6691 ரன்), 221 ஒரு நாள் போட்டிகளில் (7091 ரன்கள்) விளையாடியுள்ளார். அதிரடியாக ஆடுவதால், விரைவில் விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார் என்ற விமர்சனம் சேவக் மீது எழுந்துள்ளது. இது குறித்து சேவக் கூறியது:

அதிரடியாக ஆடுவது தான் எனது இயல்பான ஆட்டம். இதன் மூலம் தான் சர்வதேச அரங்கில் அதிக ரன்களை குவித்துள்ளேன். பந்துகளை வீணடிப்பதை நான் விரும்பவில்லை. தற்போது "ஷாட்களை' தேர்வு செய்வதில் கவனமாக உள்ளேன்.

அதிரடியாகவும், அதே சமயத்தில் தற்காப்பாகவும் ஆட முயற்சித்து வருகிறேன். கங்குலி, டிராவிட், கும்ளே, தோனி ஆகியோரது தலைமையில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளேன். அனைவரும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு ஊக்கமளித்தனர்.

பாராட்டுகளையும், விமர்சனங்களையும் சகஜமாக எடுத்துக் கொள்வது நல்லது. சிறப்பாக ஆடி ரன் குவிக்கும் பட்சத்தில் வாழ்த்துக்கள் குவியும். அதே நேரம் ரன் சேர்க்க திணறும் போது, விமர்சனங்கள் எழும். என் மீது எழும் விமர்சனங்களுக்கு, "பேட்' மூலமே பதிலளிக்க விரும்புகிறேன். இவ்வாறு சேவக் தெரிவித்தார்

0 comments:

Post a Comment