குறுகிய காலத்தில் அதிரடி எழுச்சி கண்ட ஐ.பி.எல்., அமைப்பு, வருமான வரித்துறை ரெய்டு, சூதாட்டப் புகார்களில் சிக்கி, தனது செல்வாக்கை இழக்கத் துவங்கியுள்ளது.
அசுர வளர்ச்சி:
இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) நேரடி கட்டுப்பாட்டில் கடந்த 2008 ம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்., ) அமைப்பு துவக்கம் கண்டது. இதன் தலைவராக லலித் மோடி நியமிக்கப்பட்டார். முதல் ஐ.பி.எல்., தொடரை (2008) வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் மோடி.
அதற்குப் பின் 2009 ம் ஆண்டு இரண்டாவது ஐ.பி.எல்., தொடரை, லோக்சபா தேர்தல் காரணமாக இந்தியாவில் நடத்த முடியவில்லை. தொடரை தள்ளி வைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மோடி, தென் ஆப்ரிக்காவில் தொடரை சிறப்பாக நடத்திக் காட்டினார். இதன் மூலம் ஐ.பி.எல்., அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. மோடியின் செல்வாக்கும் பன்மடங்கு உயர்ந்தது.
கோடிகளில் லாபம்:
இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொணர்வதில் ஐ.பி.எல்., தொடர் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் அதே சமயம் வியாபார நோக்கில் செயல்படத் துவங்கியது. அணிகளின் ஏலம், வீரர்கள் ஏலம், விளம்பரங்கள், ஒளிபரப்பு உரிமை, ஸ்பான்சர் ஷிப் என எதை எடுத்தாலும் பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்தது. ரசிகர்களின் ஆதரவும் இருந்ததால், கோடிக் கணக்கில் ஐ.பி.எல்., லாபம் சம்பாதித்தது.
பிரச்னை ஆரம்பம்:
கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த சர்ச்சைகளிலும் ஐ.பி.எல்., அமைப்பு சிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு புனே, கொச்சி என்ற இரண்டு அணிகள் புதியதாக ஐ.பி.எல்., அமைப்பில் இணைக்கப்பட்டன. இதற்கு பின்னே, பிரச்னை உருவெடுத்தது.
கொச்சி அணியை ரூ. 1533 கோடிக்கு ரெண்டேவு நிறுவனம் வாங்கியது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தலையிட்டு ரூ. 70 கோடி மதிப்பிலான பங்குகளை இலவசமாக, தனது நெருங்கிய தோழியான சுனந்தா புஷ்கருக்கு பெற்று தந்துள்ளார்.
இது பற்றி வெளியில் தெரிவிக்கக் கூடாது என சசி தரூர் தன்னை மிரட்டியதாக லலித் மோடி தெரிவித்தார். அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சசி தரூருக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து சசி தரூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதிரடி ரெய்டு:
இதனிடையே ஐ.பி.எல்., அமைப்பை, வருமானத் துறையினர் அதிரடி "ரெய்டு' நடத்தினர். இதில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளன. சூதாட்டம் நடத்தியதாக, லலித் மோடி மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரித் துறை ரெய்டு, சூதாட்ட புகார் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறார் மோடி.
உண்மை தேவை:
இந்நிலையில் ஐ.பி.எல்., அமைப்பின் சிறப்பான பயணம் தொடருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மோடிக்கு பின் வருபவர்கள், போட்டிகளை வெற்றிகரமாக நடத்த முடியுமா, அணியின் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா, ரசிகர்கள் மத்தியில் ஆதரவு தொடருமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஐ.சி.எல்., போல வீழ்ச்சியை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனை உணர்ந்து அனைத்து விஷயங்களிலும் ஐ.பி.எல்., அமைப்பு ஒளிவு மறைவின்றி செயல்பட வேண்டும். தவிர, அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அப்போது தான் சரிவிலிருந்து ஐ.பி.எல்., மீள முடியும்.
0 comments:
Post a Comment