முட்டாள்தனமான குற்றச்சாட்டு *யுவராஜ் ஆவேசம்

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் வெறுக்கத்தக்கது, முட்டாள்தனமானது,'' என, கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் யுவராஜ் சிங் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஐ.பி.எல்., தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் யுவராஜ் சிங். இந்த ஆண்டு திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இலங்கையின் சங்ககரா நியமிக்கப்பட்டார்.

இதனால் வெறுப்படைந்த இவர், இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 101 ரன்கள் மட்டும் எடுத்தார். பதவியை விட்டு நீக்கியது, யுவராஜை அதிகம் பாதித்துள்ளது என செய்திகள் வெளியானது.

தவிர, மூன்றாவது ஐ.பி.எல்.,தொடர் துவங்கும் முன்பே, இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட முயற்சித்ததாக, தற்போது "மீடியா' செய்தி வெளியிட்டது. இதற்கு பதிலளித்து யுவராஜ் கூறியது:

தற்போதுள்ள சூழ்நிலைதான், எனது செயல்பாட்டை பாதிக்கிறது என்பதெல்லாம் உண்மையில்லை. நான் எப்போதும் சிறப்பாக விளையாடவே முயற்சிப்பேன். ஆனால் என்னைப் பற்றி மீடியா வெளியிட்ட செய்திகள் அருவறுக்க கூடியதாகவும், அதிர்ச்சி தரக்கூடியதாகவும் உள்ளது. "மீடியா' தங்கள் உரிமையை மீறி செயல்படுகிறது.


சகஜம் தான்:

கிரிக்கெட்டில் ஏற்றம், இறக்கங்கள் ஏற்படுவது சகஜம் தான். இது அனைத்து வீரர்களுக்கும் ஏற்படக்கூடியது தான். காயத்தில் இருந்து மீண்டு வருவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இதற்கு முன் மூன்றுமுறை இப்படி மீண்டு வந்துள்ளேன். இம்முறையும் விரைவில் மீண்டு வருவேன். மற்றபடி அணியில் வீரர்களுக்கு இடையே பிளவு என்ற செய்தி தவறானது.

இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.


தாயார் ஆதரவு:

யுவராஜ் குறித்து அவரது தாயார் ஷப்னம் கூறுகையில்,"" குறைந்தது மூன்று ஆண்டுக்கு, நட்சத்திர வீரராக இருப்பவர், அந்த அணியை விட்டுச் செல்லக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது யுவராஜ் சிங்கிற்கு நன்கு தெரியும்.

இதுகுறித்து யுவராஜ், எப்போதும் நினைத்துப் பார்த்ததில்லை. "பார்ம்' சரியில்லாததால் தான், எல்லாம் இப்படி பேசுகின்றார்கள். ஏன் இந்த தொடரில் சங்ககரா, ஜெயவர்தனாவும் சரியாக செயல்படவில்லையே,'' என்றார்.


பிரித்தி ஜிந்தா மறுப்பு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தா கூறுகையில்,"" பஞ்சாப் அணியில் பிளவு என்ற பேச்சிற்கே இடமில்லை. எங்களுக்கு பாதகமாக செய்திகளை "மீடியா' வெளியிட வேண்டாம்.

யுவராஜ் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

0 comments:

Post a Comment