ஐ.பி.எல்., தகுதி போதாது: வெங்கடேஷ் பிரசாத்

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு, ஐ.பி.எல்., போட்டிகளில் மட்டும் திறமை காட்டினால் போதாது,'' என வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.


இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத். இதுவரை 33 டெஸ்ட் (96 விக்.,) மற்றும் 161 ஒரு நாள் (196 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது ஐ.பி.எல்., அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பவுலிங் பயிற்சி அளித்து வருகிறார்.


ஐ.பி.எல்., போட்டிகளில் திறமை காட்டும் வீரர்களுக்கு, தேசிய அணியில் வாய்ப்பு அளிப்பது பற்றி பிரசாத் கூறியது: ஒவ்வொருவர் மனதிலும் ஐ.பி.எல்., போட்டிகள் தான் முதன்மையாக உள்ளன. இந்திய தேசிய அணியில் வாய்ப்பு பெறுவதற்கு, ஐ.பி.எல்., போட்டிகளில் திறமையாக செயல்பட்டால் மட்டும் போதாது.


உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களான ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் டிராபி தொடர்களில் இளம் வீரர்கள் சாதித்துக் காட்ட வேண்டும். "டுவென்டி-20' போட்டிகள் அதிரடிக்கு பெயர் பெற்றவை. இவ்வகை போட்டிகளில், வீரர்களின் உண்மையான திறமையை கண்டறிவது மிகவும் சிரமம்.


உழைப்பு அவசியம்: கர்நாடகா வீரர் வினய் குமார், "டுவென்டி-20' உலககோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. விடாமுயற்சியுடன் செயல்பட்ட இவர், உள்நாட்டு தொடர்களில் அசத்தியவர். உத்தப்பா, மனீஷ் பாண்டே, கோஹ்லி ஆகியோருக்கு கடின முயற்சி அவசியம். இவ்வாறு வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment