ஐ.பி.எல்., தலைமையகத்தில் 'ரெய்டு'

கொச்சி அணியின் பங்குகள் தொடர்பான சர்ச்சையில் புதிய திருப்பமாக, மும்பையில் உள்ள ஐ.பி.எல்., தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.


இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு துவங்கப்பட்டது. மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் தற்போது நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. வரும் 2011ல் கூடுதலாக கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்பட உள்ளன.


கொச்சி அணி சர்ச்சை: இந்தச் சூழலில் கொச்சி அணியின் உரிமையாளர்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் சசி தரூர் மற்றும் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல்., அமைப்பில் ஏராளமான கருப்பு பணம் புழங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து மத்திய நிதித்துறை அமைச்சகம் சார்பில் ஐ.பி.எல்., அமைப்பின் வரவுகள் பற்றி விசாரணை நடத்த முடிவு செய்யப் பட்டது. இதன் ஒரு பகுதியாக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள பி.சி.சி.சி.ஐ., அலுவலகத்தில் இருக்கும் ஐ.பி.எல்., தலைமையகத்தில் வருமான வரித் துறையின் 4 பேர் அடங்கிய சிறப்பு குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது ஐ.பி.எல்., அமைப்பின் நிதி குளறுபடிகள் தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் சிக்கின. இதனை அதிகாரிகள் கைப் பற்றியதாக கூறப்படுகிறது.


மும்பை பிரிவு: ஐ.பி.எல்., அமைப்பின் நிதி தொடர்பான விபரங் களை கண்காணிக்க வருமான வரித்துறை சார்பில் தனிப்பிரிவு ஒன்று மும்பையில் உள்ளது. இதன் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' வருமான வரி சட்டம் 133(6)ன் கீழ் தகவல்களை பெறும் நோக்கில் தான் ஐ.பி.எல்., அலுவலகத்துக்கு அதிகாரிகள் வந்துள்ளனர். இதனை சோதனை என்று சொல்ல முடியாது. நிதி முறைகேடு நடந்துள்ளதா, கருப்பு பணம் புழங்குகிறதா, அன்னிய முதலீடு உள்ளதா என்று தான் ஆய்வு செய்தனர்,''என்றார்.


மோடி விளக்கம்: அதிகாரிகளின் சோதனை செய்தியை கேட்டதும் மும்பை அலுவலகத்துக்கு விரைந்த லலித் மோடி கூறுகையில்,''இது 'ரெய்டு' அல்ல. வெறும் விசாரணை தான். இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப் போம்,''என்றார்.


மோடியின் கடைசி இன்னிங்ஸ்: ஐ.பி.எல்., அமைப்பின் தலைவராக உள்ள லலித் மோடியின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது. இவரது அதிகாரத்தை குறைக்கும் நோக்கில் பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர், விரைவில் ஐ.பி.எல்., அமைப்பின் துணை தலைவராக நியமிக்கப்பட உள்ளார். இதற்கு வரும் 23ம் தேதி நடக்க இருக்கும் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.


2 மணி நேரம் விசாரணை: மும்பை வோர்லி பகுதியில் உள்ள லலித் மோடியின் அலுவலகத்துக்கு சென்று வருமான வரித் துறை அதிகாரிகள், சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது ஐ.பி.எல்., தொடரின் கணக்குகள், கொச்சி அணியின் விவகாரம் பற்றி சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மோடி திணறிப் போனாராம்

0 comments:

Post a Comment