ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து தன்னை "சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ., மீது வழக்கு தொடுக்க லலித் மோடி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்னணி வக்கீல்களான ராம் ஜெத்மலானி, ஹரிஷ் சால்வே ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பின் தலைவராக இருந்தவர் லலித் மோடி. கொச்சி அணியின் பங்குகள் தொடர்பாக இவருக்கும் சசி தரூருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்னையில் மத்திய அமைச்சர் பதவியை சசி தரூர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து லலித் மோடிக்கு நெருக்கடி அதிகமானது. ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பங்குகளில் முறைகேடு, "டிவி, "இன்டர்நெட் உரிமம் அளிப்பதில் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து மோடியை, இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) "சஸ்பெண்ட் செய்தது. ஊழல் புகார் தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டது. ஐ.பி.எல்., அமைப்பின் தற்காலிக தலைவராக சிரயு அமின் நியமிக்கப்பட்டார்.
ஜெத்மலானி சந்திப்பு:
இந்தச் சூழலில் நேற்று டில்லி வந்த லலித் மோடி முன்னணி வக்கீலான ஹரிஷ் சால்வேயை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினார். பின் மற்றொரு மூத்த வக்கீலான ராம் ஜெத்மலானியுடன் நீண்ட நேரம் விவாதித்தார்.
அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தேவையான சட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளார். தவிர, தனக்கு எதிரான "சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து பி.சி.சி.ஐ., மீது வழக்கு தொடுப்பது பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.
இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மோடி மறுத்தார். அவரை வழிமறித்து கேள்வி கேட்ட நிருபர்களிடம்,""நான் எதையும் சொல்ல தயாராக இல்லை. எனது காருக்கு செல்ல அனுமதி அளியுங்கள். வீணாக தடுக்காதீர்கள். "ஜென்டில்மேன் போல் நடந்து கொள்ளுங்கள்,என, ஆவேசமாக கூறினார்.
"க்விஸ் மாஸ்டர்
லலித் மோடியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து "சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், "டுவீட்டர் இணைய தளத்தில், "க்விஸ் நிகழ்ச்சி போல கேள்விகளை கேட்டு பொழுதை கழிக்கிறார்.
சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் "ஓபனிங் பேட்ஸ்மேனாக அசத்தியது இடது கை ஆட்டக்காரர்களா அல்லது வலது கை ஆட்டக்காரர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு வலது கை பேட்ஸ்மேன்கள் (சராசரி 32.80 ரன்) என அவரே அளித்துள்ளார். இடது கை துவக்க பேட்ஸ்மேன்கள் சராசரியாக 25.83 ரன் தான் எடுத்துள்ளனர்.
பின் "சேஸ் செய்யும் அணிக்கு சாதகமாக அமைந்த "ஓவர் எது என கேட்டுள்ளார். இதற்கு நான்காவது ஓவர்(சராசரியாக 9.35 ரன்) என, புள்ளிவிபரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல்., வளர்ச்சி பெறும்
மோடி இல்லாத நிலையிலும், ஐ.பி.எல்., மிகப் பெரும் வளர்ச்சி காணும் என பி.சி.சி.ஐ., நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""லலித் மோடியால் மட்டும் ஐ.பி.எல்., வெற்றி பெறவில்லை.
இவர் இல்லாத நிலையிலும் வளர்ச்சி தொடரும். இதற்கான நடவடிக்கையை பி.சி.சி.ஐ., எடுத்து வருகிறது. அணிகளின் உரிமையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. வர்த்தக ரீதியில் ஐ.பி.எல்., அமைப்பின் மதிப்பு தொடர்ந்து உயரும்,என்றார்.
0 comments:
Post a Comment