சானியாவுக்கு கில்கிறிஸ்ட் வாழ்த்து

சோயப் மாலிக்-சானியா மிர்சா திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கில்கிறிஸ்ட்.

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவருக்கும் முகமது சோஹ்ராப் மிர்சா என்பவருக்கும் இடையே கடந்த 2009ல் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின் கருத்து வேறுபாடு ஏற்பட, நிச்சயதார்த்தத்தை சானியா ரத்து செய்தார்.

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் முடிக்க உள்ளார். இவர்களது திருமணம் வரும் ஏப். 15 ம் தேதி ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட்.

இது குறித்து அவர் கூறுகையில்,"" பத்திரிகைகளில் சானியா, சோயப் மாலிக் திருமணம் பற்றி செய்தியை படித்தேன். அவர்களது திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமைய எனது வாழ்த்துக்கள்,'' என்றார்.

இதே போல பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், தற்போதைய கேப்டன் அப்ரிதி, அப்துல் ரசாக், கம்ரான் அக்மல், மிஸ்பா ஆகியோரும் சோயப்-சானியா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


கோலாகலம்:

சானியாவை திருமணம் செய்ய உள்ள சோயப் மாலிக்கிற்கு பாகிஸ்தானில் ஆதரவு பெருகி வருகிறது. அவரது ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலரும் சியால்கோட்டில் உள்ள மாலிக்கின் வீடு முன்பு ஒன்று கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து மாலிக்கின் உறவினர் இம்ரான் மாலிக் கூறுகையில்,"" பாகிஸ்தான் ரசிகர்களின் ஆதரவு ஆச்சரியம் அளித்தது. மேளதாளங்களுடன் மாலிக்கின் வீட்டின் முன், நடனமாடிய இவர்கள் இனிப்புகள் வழங்கி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

சானியா இந்தியர் என்பதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இவர்களது திருமணத்தின் மூலம், இரு நாடுகள் இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படும்,'' என்றார்.


பாதுகாப்பு காரணம்

திருமணத்துக்குப் பின் சானியா, சோயப் மாலிக் ஜோடி துபாயில் குடியேறுவதற்கு, பாதுகாப்பு தான் முக்கிய காரணம் என செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து சானியா குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில்,"" சானியா பாகிஸ்தானில் தங்குவதில் அவரது குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை.

பாகிஸ்தானில் நிலவி வரும் பயங்கரவதாத அச்சுறுத்தல் தான் இதற்கு முக்கிய காரணம். தவிர, இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் மோதல் போக்கும், துபாயில் குடியேறும் முடிவை தந்துள்ளது,'' என்றார். துபாயில் மாலிக்கிற்கு சொந்தமாக ஒரு "அபார்ட்மென்ட்' உள்ளது. இது கடந்த 2008 ம் ஆண்டு கனடாவில் நடந்த "டுவென்டி-20' தொடரின் போது துபாய் நிறுவனம் ஒன்று மாலிக்கிற்கு பரிசாக அளித்தது.


மாலிக்கிற்கு மிரட்டல்:

இதற்கிடையே சோயப் மாலிக்கிற்கு அவரது முதல் மனைவியான ஆயிஷாவின், தந்தை சித்திக் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"" எனது மகளை கடந்த 2005 ம் ஆண்டு சோயப் மாலிக் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இதுவரை விவாகரத்து செய்ய வில்லை. அவர் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொள்வதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால் எனது மகள் ஆயிஷாவுக்கு முறைப்படி விவாகரத்து அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். என்னிடம் தேவையான ஆதாரங்கள் உள்ளன,'' என்றார்.

0 comments:

Post a Comment