ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால், சென்னை அணி வாழ்வா... சாவா நிலையில் களமிறங்குகிறது. சாதிப்பாரா ஹைடன்: சென்னை அணியின் அதிரடி துவக்க வீரர் ஹைடன், சோபிக்க வேண்டும். முரளி விஜய், ரெய்னா நம்பிக்கை அளிப்பது பலம். "மிடில்-ஆர்டரில்' தோனி, மைக்கேல் ஹசி கைகொடுக்க வேண்டும். பவுலிங்கில் போலிஞ்சர், அஸ்வின் பலம் சேர்க்கின்றனர். இவர்களுக்கு பாலாஜி, ஆல்பி மார்கல், ஜகாதி, முரளிதரன் உள்ளிட்டோர் கைகொடுக்க வேண்டும்.
கட்டாய வெற்றியை நோக்கி சென்னை கிங்ஸ்
மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று, தொடரின் 54வது லீக் போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், சங்ககராவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
சென்னை கிங்ஸ் அணி, இதுவரை விளையாடிய 13 லீக் போட்டியில் 6 வெற்றி, 7 தோல்வியை பெற்று, 12 புள்ளிகளுடன் உள்ளது. சென்னை அணிக்கு இன்றைய லீக் போட்டி, கடைசி போட்டி என்பதால், வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
ஆறுதல் வெற்றி: பஞ்சாப் அணி, இதுவரை விளையாடிய 13 போட்டியில் 4 வெற்றி, 9 தோல்வி உட்பட 8 புள்ளிகளுடன், ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் ஆறுதல் வெற்றி பெற, பஞ்சாப் அணி இன்று களமிறங்குகிறது. சமீபத்திய போட்டிகளில் எழுச்சி கண்டுள்ள பஞ்சாப் அணிக்கு ஜெயவர்தனா, கேப்டன் சங்ககரா பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். யுவராஜ் சாதித்தால் கூடுதல் பலம். பவுலிங்கில் இர்பான் பதான், பியுஸ் சாவ்லா கைகொடுக்க வேண்டும்.
-------------------
யாருக்கு வாய்ப்பு?
சென்னை அணி இன்று வெற்றி பெறும் பட்சத்தில் 14 புள்ளிகள் மற்றும் நல்ல "ரன்-ரேட்' (+0.270) அடிப்படையில் எளிதாக அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இன்று டில்லியில் நடக்கும் மற்றொரு போட்டியில் தலா 14 புள்ளிகளுடன் உள்ள டில்லி (+0.066), டெக்கான் (-0.363) அணிகள் தங்கள் கடைசி போட்டியில் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி, 16 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தோல்வியடையும் அணி, சென்னை அணியை காட்டிலும் குறைவாக "ரன்-ரேட்' பெற்றிருப்பதால், அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும்.
0 comments:
Post a Comment