ஐ.பி.எல்., அரங்கில் முதன்முறையாக விருது வழங்கும் விழா வரும் 23ம் தேதி மும்பையில் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, மும்பையில் நேற்று அறிவித்தார்.
மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இம்முறை, சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கும் விழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழா வரும் 23ம் தேதி மும்பையில் நடக்க உள்ளது. இதில் 22 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, மும்பையில் நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து மோடி கூறியதாவது: மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், முதன்முறையாக விருது வழங்க முடிவு செய்துள்ளோம்.
இந்த விழா, ஐ.சி.சி., மற்றும் பி.சி.சி.ஐ., விருது வழங்கும் விழாவை விட வித்தியாசமானதாக இருக்கும். "கிரிக்கெட்டைன்மென்ட்' என்ற பெயரில் நடக்கவுள்ள இந்த விழா பாலிவுட் ஸ்டைலில் இருக்கும்.
22 வகை விருது:
இவ்விருதுக்கு, லீக் சுற்று வரை வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 22 வகையான விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 10 விருதுக்கான வீரர்களை முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீநாத், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் லாரா, அம்பயர் சைமன் டபெல், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோர் அடங்கிய 5 பேர் குழு தேர்வு செய்யும். எட்டு விருதுகள் பார்வையாளர்களால் தேர்வு செய்யப்படும்.
மூன்று விருதுகள் புள்ளிவிபரங்களை (ஸ்டேட்ஸ்) அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படும். ஒரு விருது ஐ.பி.எல்., தொடரில் இடம் பிடித்துள்ள எட்டு அணிகளின் கேப்டன்கள் இணைந்து தேர்வு செய்வார்கள்.
பாலிவுட் நட்சத்திரங்கள்:
இவ்விழாவை பாலிவுட் நடிகர் ஷாருக் கான், கரண் ஜோகர் இணைந்து நடத்த உள்ளனர். "ஆஸ்கர்' நாயகன் ஏ.ஆர். ரஹமானின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஷில்பா ஷெட்டி, கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, பிரித்தி ஜிந்தா, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.
ஏப்ரலில் ஐ.பி.எல்.,:
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நான்காவது ஐ.பி.எல்., தொடர் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க திட்டமிட்டுள்ளோம். இனிவரும் ஆண்டுகளில் ஏப்ரல்-மே மாதத்தில் ஐ.பி.எல்., தொடரை நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய அணிகள் இணைவதால், போட்டிகளில் எண்ணிக்கை 94 ஆக உயருகிறது.
இவ்வாறு லலித் மோடி கூறினார்
0 comments:
Post a Comment