ஐ.பி.எல்., அணியில் இடம் பிடிப்பேன்

பயிற்சியாளராக, விரைவில் ஏதேனும் ஒரு ஐ.பி.எல்., அணியில் இடம் பிடிப்பேன்,'' என முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஜான் ரைட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னை, டில்லி உள்ளிட்ட எட்டு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் கோல்கட்டா அணியின் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஜான் ரைட் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டேவ் வாட்மோர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அடுத்து ஆண்டு கொச்சி, புனே உள்ளிட்ட மேலும் இரண்டு புதிய அணிகள் இணைய உள்ளன. இதனால், ஏதேனும் ஒரு ஐ.பி.எல்., அணியில் பயிற்சியாளராக வாய்ப்பு கிடைக்கும் என ஜான் ரைட் நம்பிக்கையுடன் உள்ளார்.

இதுகுறித்து ஜான் ரைட் கூறியதாவது: கோல்கட்டா அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமான விஷயம். இருப்பினும், ஐ.பி.எல்., அரங்கில் மேலும் இரண்டு புதிய அணிகள் இணைய உள்ளன. இதனால், ஏதேனும் ஒரு அணியில் பயிற்சியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இந்திய அணியில், ஐந்து ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்ததால், மைதானம் குறித்து நன்கு தெரிந்துள்ளேன். இதனால், "டுவென்டி-20' போட்டிக்கு ஏற்ப, வீரர்களை தயார் படுத்த முடியும்.

வரும் 30ம் தேதி துவங்கவுள்ள "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், எந்த அணி கோப்பை வெல்லும் என்பதை தற்போது கூற முடியாது. ஏனெனில், "டுவென்டி-20' போட்டிகளை பொறுத்தவரை, அன்றைய தினம் சிறப்பாக செயல்படும் அணிக்கு வெற்றி கிடைக்கும்.

இத்தொடரில் உடற்தகுதி முக்கிய பங்குவகிக்கும். வீரர்கள் காயமின்றி, நூறு சதவீத உடற்தகுதியுடன் இருந்தால், எளிதில் சாதிக்க முடியும். இக்கட்டான நேரத்தில், பதட்டமில்லாத முடிவுவெடுக்கும் கேப்டனுக்கு, வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

உலக கோப்பை தொடரில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இல்லாதது, இந்திய அணிக்கு பின்னடைவான விஷயம். இருப்பினும் மற்ற வீரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், எளிதில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு ஜான் ரைட் கூறினார்.

0 comments:

Post a Comment