விரைவில் இந்தியா-பாக்., கிரிக்கெட்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தங்களுக்குள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இது பொருளாதார ரீதியில் முக்கியமானவை. இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொள்வோம்,'' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தலைவர் ஹாருண் லார்கட் தெரிவித்துள்ளார்.

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா, பாகிஸ்தான் நட்புறவு பாதிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகள் இடையே, கிரிக்கெட் உட்பட பல விளையாட்டு போட்டிகள் விளையாடுவது நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ஐ.சி.சி., தலைவர் ஹாருண் லார்கட் கூறியது:
பொதுவாக அரசியல் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக, குறிப்பிட்ட இடத்துக்கு சென்று விளையாட வேண்டாம் என, அரசாங்கம் சொல்லும் போது, அந்தந்த அணிகள் கேட்டுத்தான் ஆகவேண்டும். மற்றபடி நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த முன்வரலாம்.

ஆதரவு வேண்டும்: இந்திய அணி கடந்த 2009 துவக்கத்தில், பாகிஸ்தான் செல்ல இருந்தது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக இது ரத்து செய்யப்பட்டது. தற்போது பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையில், சர்வதேச போட்டிகள் இங்கு நடத்தப்பட மாட்டாது. இந்த சிரமமான காலத்தில் நாம், பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தர வேண்டும்.

ஐ.சி.சி., ஏற்பாடு: பொருளாதார ரீதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் முக்கியமானவை. இதனால் அடுத்து, எதிர்கால கிரிக்கெட் அட்டவணையில் இரு அணிகள் பங்கேற்கும் போட்டிகள் சேர்க்கப்படும். இதனை ஐ.சி.சி., முன்னின்று ஏற்பாடு செய்யும்.

பாக்., வரும்: வரும் 2011, உலக கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணி இந்தியாவில், விளையாடுவதில் எந்த பிரச்னையும் இருப்பதாக நினைக்கவில்லை. இதற்காக ஒருங்கிணைப்பு கமிட்டி அளவில் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒருவேளை மும்பையில் நடக்கும் பைனலுக்கு முன்னேறினால் கூட, வரவேற்க தயாராக உள்ளோம்.

வழிகாட்டி அல்ல: இந்த இரு அணிகளும், சுமூக உறவில் இருப்பது எல்லோருக்கும் நல்லது. தவிர, மற்ற அணிகள் அனைத்தும் நட்புறவுடன் இருப்பதையும், நாங்கள் உறுதி செய்வோம். தவிர, இந்தியா தான் ஐ.சி.சி.,க்கு எப்போதும் வழி காட்டியாக உள்ளது என்ற, ஒரு தவறான கருத்து நிலவுகிறது.

எங்களது மற்ற உறுப்பினர்களை போல, இந்தியாவும் முக்கியமான நாடு. அவ்வளவு தான். தற்போது சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் ஜிம்பாப்வேவும், எங்களுக்கு முக்கிய உறுப்பினர்தான்.

இவ்வாறு லார்கட் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment