சென்னை கிங்ஸ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐ.பி.எல்., தொடர் அறிமுகமானபோது சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்பும் ஆதரவும், தற்போது குறையத்துவங்கியுள்ளது. மற்ற ஏழு அணிகளுடன் ஒப்பிடும்போது, சென்னை அணிதான் மிக மோசமாக இருக்கிறது. இதற்குகாரணம் என்ன?


கிரிக்கெட் புக்கிகளால் மிகைப்படுத்தபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாம் ஆண்டு பைனல் வரை வந்து தோற்றது. இரண்டாம் ஆண்டு அரையிறுதி வரை எட்டி பார்த்தது. இம்முறை அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


இன்று சென்னையில் நடக்கும் லீக் போட்டியில், கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி, இம்முறை வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.



தோனி பிரச்னை:


சென்னை சூப்பர் கிங்ஸ்சை பொறுத்தமட்டில் அதிர்ஷ்டக்கார கேப்டன், தொட்டது துலங்கும் என்று வர்ணிக்கப்பட்ட தோனி தான் இப்போது பிரச்னைக்கு காரணமாக தெரிகிறார்.


சென்னை அணியின் தற்போதைய செயல் பாடு குறித்து அடையாளம் காட்ட விரும்பாத இளம்வீரர் ஒருவர், சொன்னது இதுதான்:


தோனியின் தன்னிச்சையான செயல்பாடும், யாருக்கும் கட்டுப்படாத அவரது நடவடிக்கை பற்றி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், அணி உரிமையாளர்களிடம் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை. முறையாக பயிற்சிக்கு வருவதில்லை என புகார்கள் முணுமுணுக்கப் பட்டுவருகின்றன.


அணியில் உள்ள தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. ரஞ்சியில் சாதித்த கணபதி சிறந்த ஆல்-ரவுண்டர், அனிருத் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. அணியில் உள்ள மூத்த வீரர்களான ஹைடன், முரளிதரன், மார்கல்ஆகியோரைசரிவர நடத்துவது இல்லை.


டிரசிங் ரூமில் கூட ஆலோசனை செய்வது இல்லை. பயிற்சியாளர் பிளமிங், 12வது ஆட்டக்காரர் மூலம் சொல்லி அனுப்பும் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்பதில்லை என குற்றச்சாட்டுகள் தோனியின் மீது அடுக்கப்படுகின்றன.


இந்தாண்டுடன் வீரர்களுக்கான ஏல உரிமை முடிகிறது. அடுத்த சீசனுக்கு அவர் மற்றொரு அணிக்கு பேசப்பட்டு விட்டதால் ஜகா வாங்குவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இன்னும் இருக்கும் ஏழு ஆட்டங்களில் 6ல் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் சென்னை அணி உள்ளது. மற்ற ஏழு அணியின் உரிமையாளர்களுக்கு கிரிக்கெட் புதிது. சென்னை அணியை நடத்தும் இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாகத்திற்கு 50 ஆண்டுகள் கிரிக்கெட் நடத்திய அனுபவம் இருந்தும் திணறுவது ஏன் என்று தெரியவில்லை.


குறிப்பாக சென்னையில் நடக்கும் ஆட்டங்களிலாவது சென்னை அணி சிறப்பாக விளையாடுவதற்கு அணி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.



லாபம் அமோகம் :


ஐ.பி.எல்., அமைப்பில் அங்கம் வகிக்கும் அணி உரிமையாளர்களுக்கு, 'டிவி' ஒளிபரப்பு உரிமையின் மூலம் அவர்கள் போட்ட முதலீடுக்கு மேல் லாபம் கிடைத்து விட்டது. மூன்றாண்டுகளில் கிடைத்த வருமானத்தை கணக்கு காட்டி, பங்குச்சந்தையில் பட்டியலிடலாமா என்ற ரீதியில் சென்னை, பஞ்சாப் அணிகள் கணக்குபோடத்துவங்கிவிட்டன. இதனால், அணியில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

0 comments:

Post a Comment