தோனி சந்திப்பை தவிர்த்தது ஏன்?

கடந்த ஆண்டு போல் தேவையில்லாமல் சர்ச்சை ஏற்படுவதை தவிர்க்கவே, கேப்டன் தோனியை இம்முறை சந்திக்கவில்லை,'' என, கான்பூர் ஆடுகள பராமரிப்பாளர் ஷிவ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல், 2008ல் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. மூன்று நாளில் முடிந்த இப்போட்டியில் இந்தியா வென்றது.

பின், கேப்டன் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள், கிரீன் பார்க் ஆடுகள பராமரிப்பாளர் ஷிவ் குமாரை சந்தித்து, 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு வழங்கினர். இது வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் சுழலுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டதற்காக கொடுத்த பரிசு என்று விமர்சிக்கப்பட்டது.

இதே மைதானத்தில் இந்திய அணி, நேற்று முன்தினம் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதுகுறித்து ஷிவ் குமார் கூறியது: கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிந்தது.

இம்முறை அப்படி நடந்து விடக்கூடாது, அதே நேரம் போட்டி "டிராவிலும்' முடிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். எல்லாம் சேர்ந்து ஒருவித பதட்டத்தை ஏற்படுத்த, நெருக்கடிக்கு ஆளானேன். இருப்பினும் சிறந்த ஆடுகளத்தை அமைக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதிர்ஷ்டவசமாக எல்லாம் சிறப்பாக அமைந்து விட்டது.


எதிர்பார்த்தது நடந்தது:

இந்திய அணி முதலில் பேட் செய்த போது சேவக் முதல் 19 பந்துகளில் வழக்கத்திற்கு மாறாக 3 ரன்கள் தான் எடுத்திருந்தார். ஆனால் முதல் ஒருமணி நேரத்திற்கு பின் பேட்டிங் எளிதாக இருக்கும் என நான் எதிர்பார்த்திருந்தேன். முதலில் தப்பி பிழைத்த சேவக், பின் இலங்கை பந்துவீச்சை விளாசித் தள்ளி, சதம் கடந்தார்.


கவாஸ்கர் பாராட்டு:

போட்டி நடந்து கொண்டிருந்த போது வர்ணனையாளர் அறைக்கு ஒருமுறை சென்றேன். அப்போது அங்கு இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர்,"இந்தியாவில் உள்ள சிறந்த டெஸ்ட் ஆடுகளங்களில் இதுவும் ஒன்று,' என தெரிவித்தார். இந்த ஒரே பாராட்டு எனக்கு போதும். அது நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும்.


அன்பளிப்பு பிரச்னை:

கடந்த ஆண்டு போட்டி முடிந்ததும் தோனி தந்த அன்பளிப்பு குறித்து பிரச்னை ஏற்பட்டது. அந்த சம்பவம் இன்னும் என்மனதில் அப்படியே உள்ளது. அதனால் தான் இம்முறை தோனியை சந்திப்பதை தவிர்த்தேன். நான்கு நாட்களில் போட்டி முடிந்தும், எவ்வித பிரச்னையும் இல்லாமல் இருந்தது குறித்து மகிழ்ச்சி. இம்முறை அன்பளிப்பு கிடைத்ததா இல்லையா என்பது குறித்து கேட்கவேண்டாம். எனக்கு எதுவும் தெரியாது.


முடிவுக்கு மகிழ்ச்சி:
பொதுவாக தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்கள் முடிவை எதிர்பார்க்கிறார்கள். அதேநேரம் ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் வகையிலும், முடிவை தருகிறவாறும் மைதானத்தை தயார் செய்ய வேண்டும். கிரீன் பார்க் மைதானத்தில் அதிக போட்டிகள் சோர்வைத் தரும் வகையில் "டிரா' ஆகியுள்ளது. இப்போது கடந்த 5 போட்டிகளில் 4 ல் முடிவு ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment