இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5-வது ஒரு தின கிரிக்கெட் ஆட்டம் ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
வதோதராவில் நடைபெற்ற முதல் ஆட்டம், மொஹாலியில் நடைபெற்ற 4-வது ஆட்டம் ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவும், நாகபுரி மற்றும் தில்லியில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியாவும் வென்றுள்ளன.
மீண்டும் கம்பீர்: காயம் காரணமாக மொஹாலியில் விளையாடாத கெüதம் கம்பீர் உடற் தகுதி பெற்று இந்த ஆட்டத்தில் பங்கேற்க உள்ளார். இது இந்திய அணிக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் பெüண்டரிகளாக விளாசினாலும், இதுவரை அதிகமான ஸ்கோரை அவரால் எடுக்க முடியவில்லை. அந்தக் குறையை இதில் நிவர்த்தி செய்வார் என எதிர்பார்க்கலாம்.
தொடக்க வீரர்கள் அதிக ரன்களைக் குவித்தால், அதன் பின்னர் வரும் யுவராஜ் சிங், தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் மேலும் சிறப்பாக விளையாட முடியும். மொஹாலி ஆட்டத்தில் பேட்ஸ்மென்தான் இந்தியா தோல்வியுற காரணம் என தோனி தெரிவித்திருந்தார்.
எனவே, இந்த ஆட்டத்தில் முன்னணி பேட்ஸ்மென் அனைவரும் பொறுப்பாக விளையாட வாய்ப்புள்ளது.
பந்துவீச்சு: பந்துவீச்சைப் பொருத்தவரை இஷாந்த் சர்மா, ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் மற்றும் பகுதி நேரப் பந்துவீச்சாளர்கள் ஓரளவு சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.
இந்திய அணியின் பீல்டிங்கும், பேட்டிங்கும் முன்னேற்றம் கண்டால் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி அளிக்க முடியும்.
வாட்சன், ஹசி, பாண்டிங்கை நம்பி...: மறுபுறும், உலக சாம்பியனான ஆஸ்திரேலியா வாட்சன், 4 ஆட்டங்களில் 3 அரை சதம் விளாசியுள்ள மைக்கேல் ஹசி, கேப்டன் பாண்டிங் ஆகியோரையே நம்பி உள்ளது.
தொடரும் காய பிரச்னை: ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை வீரர் பிரெட் லீ, ஜேம்ஸ் ஹோப்ஸ், விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் ஆகியோருடன் தற்போது பீட்டர் சிடிலும் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இதற்கு முன்னர் சிறப்பாகப் பந்துவீசி வந்த மிட்செல் ஜான்சன் கடந்த சில ஆட்டங்களாக எதிர்பார்த்த அளவு சிறப்பாகப் பந்துவீசவில்லை.
ஆனால், அந்த அணிக்கு ஆறுதலாக சுழற் பந்துவீச்சாளர் நாதன் ஹாரிஸ், ஷேன் வாட்சன் போன்றோர் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.
தற்போதையத் தொடரில் வென்றால், உலகத் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
அத்துடன், இந்த ஆட்டத்தில் வெல்லும் அணியே தொடரைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
0 comments:
Post a Comment