இந்தியா தோற்றாலும் சச்சின் "வெற்றி

ஐதராபாத்தில் நடந்த ஐந்தாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. ஆனாலும் துணிச்சலாக போராடிய சச்சின், ஒரு நாள் அரங்கில் 17 ஆயிரம் ரன்கள், 45 வது சதம் கடந்து ஆட்டநாயகனாக அசத்தினார்.

இவர் 175 ரன்கள் விளாசிய போதும், இந்திய வெற்றி கடைசி ஓவரில் பரிதாபமாக நழுவியது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடக்கிறது. முதல் 4 போட்டிகளின் தொடர் 2-2 கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து 5 வது போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது.

ஜான்சன் நீக்கம்
இந்திய அணியில் விராத் கோஹ்லி, இஷாந்த் சர்மாவுக்குப் பதில் காம்பிர், முனாப் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் ஜான்சன், ஹென்ரிக்ஸ் நீக்கப்பட்டு மெக்கேய், வோகஸ் இடம் பெற்றனர். டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் பேட்டிங் தேர்வு செய்தார்.

வாட்சன் விளாசல்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் அதிரடி துவக்கம் தந்தார். இவருடன் இணைந்த மார்ஷ் நிதானமாக ஆடினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், வாட்சன் அவுட்டானார். 3 சிக்சர் 9 பவுண்டரி உட்பட 93 ரன்கள் குவித்த வாட்சன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

மார்ஷ் சதம்:
அடுத்து வந்த கேப்டன் பாண்டிங், மார்சுடன் இணைந்தார். பொறுப்புடன் ஆடிய பாண்டிங் 45 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ், ஒரு நாள் அரங்கில் தனது முதல் சதத்தை கடந்தார். இவர் 112 ரன்கள் (2 சிக்சர், 8 பவுண்டரி) சேர்த்து வெளியேறினார்.

ஒயிட் அதிரடி:
பின்னர் ஆட்டத்தை தன்கையில் எடுத்துக் கொண்டார் ஒயிட். இவருக்கு ஹசி ஒத்துழைப்புக் கொடுக்க, ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் அதிகரித்தது. ஒரு நாள் அரங்கில் 5 வது அரை சதம் கடந்தார் ஒயிட் (57). இவர் 5 சிக்சர்களை விளாச, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது. ஹசி (31) அவுட்டாகாமல் இருந்தார்.

சூப்பர் துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சின், சேவக் அதிரடி துவக்கம் தந்தனர். 38 ரன்கள் (5 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்த சேவக், இந்த முறையும் நிலைத்து நின்று ஆட தவறினார். அடுத்து வந்த காம்பிர் (8) பெரும் ஏமாற்றம் அளித்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் (9) கைகொடுக்கத் தவறினார்.

சச்சின் மிரட்டல்:
ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் அதிரடியில் மிரட்டினார் சச்சின். இவருடன் இணைந்த கேப்டன் தோனி, நிதானமாக ஆடினார். வோகஸ் பிடித்த சூப்பர் "கேட்ச்' மூலம் 6 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் தோனி. சிறப்பாக ஆடிய சச்சின், ஒரு நாள் அரங்கில் 45 வது சதம் கடந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர் அடிக்கும் 9 வது சதம் இது.

சூப்பர் ஜோடி:
அடுத்து வந்த ரெய்னா, சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். ஒரு நாள் அரங்கில் 12 வது அரை சதம் பதிவு செய்த ரெய்னா 59 ரன்களுக்கு அவுட்டானார். 5 வது விக்கெட்டுக்கு சச்சின், ரெய்னா ஜோடி 137 ரன்கள் சேர்த்தது. முக்கிய கட்டத்தில் களமிறங்கிய ஹர்பஜன் டக்-அவுட்டாகி நெருக்கடி உண்டாக்கினார்.

சச்சின் "175':
சிறிது நேரத்தில் சச்சின் அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. 19 பவுண்டரி 4 சிக்சர் உட்பட 175 ரன்கள் குவித்தார் சச்சின். மறுமுனையில் தேவை இல்லாமல் ஒரு ரன்னுக்காக ஓடிய ஜடேஜா, ரன் அவுட்டாகி வெறுப்பேற்றினார். நெஹ்ரா (1) சொதப்பினார். பின்னர் பிரவீண், முனாப் இணைந்தனர். இந்த ஜோடி அணிக்கு வெற்றி தேடித் தரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பிரவீண் (9) ரன் அவுட்டாகி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். 49.4 ஓவர் முடிவில் இந்திய அணி 347 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி தோல்வி அடைந்தது. 3 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றியை எட்டிய ஆஸ்திரேலிய அணி தொடரில் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

------
சச்சின் முதலிடம்
ஒரு நாள் அரங்கில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் 17,168 ரன்களுடன்(435 போட்டி, 45 சதம்) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் இலங்கை வீரர் ஜெயசூர்யா 13, 377 ரன்களுடன்(441 போட்டி, 28 சதம்) உள்ளார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங 12,286 ரன்களுடன்(329 போட்டி, 28 சதம் )இருக்கிறார்.
----------

"டெயிலெண்டர்கள்' சொதப்பல்
நேற்றைய போட்டியில், இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தது. 175 ரன்கள் குவித்த சச்சின் 332 ரன்கள் வரை களத்தில் இருந்தார். அதற்குப் பின் ஜடேஜா, ரன் அவுட்டாகி தோல்விக்கு வித்திட்டார். பின்னர் டெயிலெண்டர்களான நெஹ்ரா (1), பிரவீண் (9), முனாப் (2*) ஆகியோரின் பொறுப்பற்ற ஆட்டம் இந்தியாவின் வெற்றியை பறித்து விட்டது.

-----------
ரசிகர்கள் போராட்டம்
நேற்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் பிளாக் மார்க்கெட்டில் அதிகளவு விற்கப்பட்டுள்ளன. இதனால் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள், போட்டி நடந்த ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தின் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் கிரிக்கெட் சங்க நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில விளையாட்டு அமைச்சர் வெங்கட்ரெட்டி. இப்பிரச்னை குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சஷாங்க் மனோகரிடம் பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-------------

பீல்டிங் ஏமாற்றம்
மொகாலியில் நடந்த 4 வது போட்டியில், பீல்டிங்கில் அசத்திய இந்திய வீரர்கள் நேற்று ஐதராபாத்தில் சொதப்பினர். ஆஸ்திரேலிய வீரர் மார்ஷ் 29 ரன்கள் எடுத்திருந்த போது, கைக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்பை தோனி தவற விட்டார். அடுத்து சேவக், ஒரு "கேட்ச்' வாய்ப்பை கோட்டை விட்டார். அப்போது மார்ஷ் 52 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இவற்றை பயன்படுத்திக் கொண்ட மார்ஷ், ஒரு நாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

0 comments:

Post a Comment