கிரிக்கெட்டில் 439 ரன்கள் குவித்து சாதனை புரிந்த 12 வயது சிறுவன் சர்பராஸ் கான், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
மும்பை ஸ்பிரிங்ஃபீல்ட் ரிஸ்வி பள்ளியில் படிப்பவர் சர்பராஸ் கான். மும்பையில் பள்ளிகளுக்கு இடையிலான 16 வயதுக்குள்பட்டோர் ஹாரீஸ் ஷீல்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த கிரிக்கெட் போட்டியில் ரிஸ்வி பள்ளி சார்பில் கலந்துகொண்ட சர்பராஸ் கான் இந்தியன் எஜுகேஷன் சொசைட்டி அணிக்கெதிரான போட்டியில் 439 ரன்கள் குவித்தார்.
421 பந்துகளை எதிர்கொண்டு இந்த ரன்களைக் குவித்து சாதனை படைத்தார் சர்பராஸ். இதில் 56 பெüண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த போட்டியில் ஒருவர் குவிக்கும் அதிகபட்ச ரன்களாகும் இது. இதற்கு முன்னர் சாராதாசிரம வித்யாமந்திர் பள்ளியைச் சேர்ந்த சஞ்சீவ் ஜாதவ் 422 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. 21 ஆண்டுகளுக்கு முன் சச்சின் இதே போட்டியில் 329 ரன்களைக் குவித்தார்.
தனது சாதனை குறித்து சர்பராஸ் கான் கூறியதாவது:
சச்சின்தான் என்னுடைய முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவரை நான் என்னுடைய மானசீக குருவாக எண்ணிக்கொண்டு கிரிக்கெட் விளையாடத் துவங்கினேன்.
நான் அவருடைய சாதனையை முறியடித்தேன் என்பதற்காக அவருடன் என்னை ஒப்பிட்டுப் பேசக்கூடாது.
அவர் கிரிக்கெட்டின் கடவுள். அவர் சாதித்ததில் ஒரு சதவீதம் நான் சாதித்தால் கூட அவரிடம் நான் ஆசிபெற்றதாக அர்த்தம். அவரைச் சந்திப்பதுதான் என் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர்.
0 comments:
Post a Comment