காம்பிர் மீண்டும் "நம்பர்-1'

ஐ.சி.சி., சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய வீரர் கவுதம் காம்பிர் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) டெஸ்ட் வீரர்களுக்கான புதிய ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை துபாயில் நேற்று அறிவித்தது. இதில் இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிர் 886 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். 

இதற்கு கான்பூர் டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்ததே காரணம். இவர் கடைசியாக விளையாடிய நான்கு டெஸ்டிலும் சதமடித்து அசத்தினார். 

இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., சிறந்த டெஸ்ட் வீரர் விருது வென்ற காம்பிர், கடந்த ஜூலை மாதம் டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடம் பிடித்தார். பின்னர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். தற்போது கான்பூர் டெஸ்ட் இவரை மீண்டும் முதலிடத்துக்கு கொண்டு சென்றுள்ளது. 

தனது சகோதரியின் திருமணம் காரணமாக மும்பையில் வரும் டிச. 2ம் தேதி துவங்கும் மூன்றாவது டெஸ்டில் காம்பிர் பங்கேற்காதது, இந்திய அணிக்கு பின்னடைவாக அமையலாம். இலங்கையின் மகிலா ஜெயவர்தனா (869 புள்ளி), கேப்டன் சங்ககரா (822 புள்ளி) முறையே 2வது மற்றும் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.


சச்சின் சரிவு:

கான்பூர் டெஸ்டில் காம்பிருடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்க்க உதவிய சேவக், நான்கு இடங்கள் முன்னேறி 19வது இடம் பிடித்தார். டெஸ்ட் அரங்கில் 28வது சதமடித்து அசத்திய டிராவிட், மூன்று இடங்கள் முன்னேறி 18வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான கேப்டன் தோனி 32வது, யுவராஜ் 44வது இடத்தில் உள்ளனர். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் மற்றும் லட்சுமண் முறையே 16வது மற்றும் 20வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.


ஹர்பஜன் முன்னேற்றம்:

டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 704 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஜாகிர் கான் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கான்பூர் டெஸ்டில் ஆட்டநாயகனாக வலம் வந்த இந்தியாவின் ஸ்ரீசாந்த் 30வது இடத்துக்கு முன்னேறினார். இஷாந்த் சர்மா 24வது இடத்தில் உள்ளார். 


முரளிதரன் பின்னடைவு:

இலங்கை வீரர் முரளிதரன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவின் ஜான்சன் 2வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் (7வது), பாகிஸ்தானின் முகமது ஆசிப் (9வது) "டாப்-10' வரிசையில் உள்ளனர்

0 comments:

Post a Comment