விளையாட்டு வீரர்கள் வயது மோசடியில் ஈடுபட்டால், அவர்களுக்கு இரண்டாண்டு தடை விதிக்க வேண்டும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபகாலமாக வயது மோசடியில் ஈடுபட்டு போட்டியில் பங்கேற்பது அதிகரித்து வருவதால் மத்திய விளையாட்டு அமைச்சகம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய மற்றும் மாநில விளையாட்டு கூட்டமைப்புகள், இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வீரர்கள் வயது மோசடியில் முதல் முறையாக ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் 2 ஆண்டு தடையும், மீண்டும் அதே தவறை செய்தால் 5 ஆண்டு தடையும் விதிக்க வேண்டும்.
வயது மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான தெளிவான கொள்கை விரைவில் வகுக்கப்படும். ஊக்க மருந்து எடுத்துக் கொள்வது எப்படி குற்றமோ, அதே போல வயதை மாற்றி பங்கேற்பதும் குற்றமாகும். ஊக்க மருந்து பயன்படுத்துவதை எப்படி கருதுகிறோமோ, அதே போன்றே இதையும் கருத வேண்டும்.
தேசிய அளவில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் அடையாள அட்டையை கூட்டமைப்புகள் வழங்க வேண்டும். முறையான ஆவணங்களை சரிபார்த்த பின் அவர்களது வயது அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
அடுத்த பிப்ரவரி முதல் இத்தகைய அடையாள அட்டை இருந்தால்தான் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க முடியும்.
மோசடியைத் தடுப்பதற்காக தேசிய மற்றும் மாநிலப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் வயதுச் சான்றிதழ்களை கூட்டமைப்புகள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது வயது சரிபார்ப்பு பணியையும் மேற்கொள்ள வேண்டும்.
வீரரின் வயது குறித்து சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இது முறையாக அந்த வீரருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
பரிசோதனை குறித்து வீரருக்கு சந்தேகம் ஏற்பட்டால், அவருக்கு வயதுப் பரிசோதனைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது
0 comments:
Post a Comment