21வது ஆண்டில் சச்சின்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று தனது 21வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இந்த இனிமையான தருணத்தில் இந்திய அணிக்கு உலக கோப்பை(2011) பெற்று தருவதை இவர் இலக்காக கொள்ள வேண்டுமென கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய அணியில் கடந்த 1989ல் அறிமுகமான சச்சின், நேற்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்தார். இன்று புதிய இன்னிங்சை துவக்குகிறார்.

30 ஆயிரம் ரன்:
இலங்கைக்கு எதிராக ஆமதாபாத்தில் இன்று துவங்கும் முதல் டெஸ்டில் சச்சின் 30 ஆயிரம் ரன்களை எடுத்து சாதிக்க காத்திருக்கிறார். டெஸ்ட்(12,773 ரன்), ஒரு நாள் போட்டிகளில்(17,178 ரன்) அதிக ரன் எடுத்துள்ள இவர் ஒரே ஒரு "டுவென்டி-20' போட்டியில் 10 ரன் எடுத்துள்ளார்.

இன்றைய டெஸ்ட் போட்டியில் 39 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், கிரிக்கெட் வரலாற்றில் 30 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனை படைக்கலாம்.


சாதனை களம்:
ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானம் இந்தியாவுக்கு ராசியானது. இங்கு தான் 1987ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நமது கவாஸ்கர், டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

இதே போல இங்கு 1994ல் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் ஹாட்லியின்(431) சாதனையை கபில் தேவ்(432) தகர்த்தார். இங்கு 1999ல் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில், சச்சின் தனது முதல் இரட்டை சதம் அடித்தார். எனவே, இம்முறையும் சாதிக்க வாய்ப்பு உள்ளது.


ஒப்பிட முடியாது:

டெஸ்ட் அரங்கில் 21வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சச்சினை பாராட்டி கவாஸ்கர் கூறியது:
சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள சச்சினை மற்ற வீரர்களுடன் ஒப்பிட முடியாது. இத்தனை காலம் விளையாடிய போதும் இவரது ஆட்டத்தில் இளமை இன்னும் மாறவில்லை. 1960க்கு பிறகு தான் கிரிக்கெட் பற்றி தெரிந்து கொள்ள துவங்கினேன். எனது இந்த அனுபவத்தில் பார்க்கும் போது சச்சின் தான் மிகச் சிறந்த வீரர்.


பொதுவாக சச்சினுக்கு ஏதாவது இலக்குகளை நிர்ணயிப்பது எனது வழக்கம். இரட்டை சதம் அடிக்க வேண்டும், ஆயிரம் ரன்களை கடக்க வேண்டும், இன்னும் அதிக சதங்கள் எட்ட வேண்டும் என அவரிடம் வற்புறுத்துவேன். தற்போது இந்திய அணிக்கு உலக கோப்பை(2011) பெற்றுத் தர வேண்டுமென உடனடி இலக்கு நிர்ணயித்துள்ளேன். இதனை வென்று தருவார் என நம்புகிறேன்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்

0 comments:

Post a Comment