டெஸ்ட் போட்டி: 7 சதவீதமாக குறைந்த ரசிகர்கள்

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளுக்கு சுத்தமாக வரவேற்பில்லை. 5 நாட்கள் நடக்கும் இப்போட்டிகளை காண 7 சதவீத ரசிகர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

"டுவென்டி-20' கிரிக்கெட் வருகைக்கு பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு மவுசு குறைந்து வருகிறது. ஆனால் இந்திய வீரர் சச்சின் கூறுகையில்,"" டெஸ்ட் கிரிக்கெட் தான் அதிக பொழுது போக்கு நிறைந்தது,'' என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.,) சார்பில் எடுக்கப்பட்ட ஒரு "சர்வேயில்', இந்தியாவில் டெஸ்ட் போட்டியை பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஏழு சதவீதம் மட்டுமே உள்ளது என தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இருந்து தலா 500 ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதன் முடிவில் 58 சதவீத இந்தியர்கள் "டுவென்டி-20' கிரிக்கெட் தான் தங்களுக்கு அதிகம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். 31 சதவீதத்தினர் ஒருநாள் போட்டிக்கு ஆதரவாக உள்ளனர்.

ஐ.பி.எல்., மோசம்:
இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால், மிகவும் பிரபலமான ஐ.பி.எல்., போட்டிகளுக்கு நான்கு சதவீத இந்தியர்கள் தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளிலும் சேர்த்து 13 சதவீதம் ரசிகர்கள் தான் டெஸ்ட் போட்டிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர். ஆனால் இந்த 3 நாடுகளிலும், ஒருநாள் போட்டிக்கு 36 சதவீத ரசிகர்கள் ஆதரவு தந்துள்ளனர்.



"டுவென்டி-20' தான் காரணம்:
டெஸ்ட் போட்டியின் மீது இருந்த ஆர்வத்தை, "டுவென்டி-20' கிரிக்கெட் வந்த பிறகு குறைத்து விட்டதாக 58 சதவீத இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தென் ஆப்ரிக்கா (23 சதவீதம்) மற்றும் நியூசிலாந்து (13 சதவீதம்) ரசிகர்களும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களும், தென் ஆப்ரிக்க மக்களும் மற்ற போட்டிகளை விட "டுவென்டி-20' கிரிக்கெட், அதிக ஆர்வத்தை தூண்டுவதாக தெரிவித்தனர்.

இந்த கருத்துக்கணிப்பு இம்மாதத்தில் துபாயில் நடக்க இருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) சமர்ப்பிக்கப்பட உள்ளது. தவிர, டெஸ்ட் விளையாடும் நாடுகளின் முக்கிய கிரிக்கெட் அதிகாரிகளின் கூட்டத்திலும், இந்த "சர்வே' பற்றிய விபரங்கள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 comments:

Post a Comment