கிரிக்கெட் "தாத்தா' சச்சின்

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு 36 வயது தான் ஆகிறது. ஆனாலும் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவதால், சக வீரர்கள் அவரை "தாத்தா' என அழைக்கத் துவங்கி விட்டதாக யுவராஜ் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

டில்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சச்சின் 17 ஆயிரம் ரன்களை எட்ட தவறினார். கடந்த 1989ல் அறிமுகமான இவர், பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். வரும் 15ம் தேதி இவர் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதுவரை 159 டெஸ்டில் 42 சதம் உட்பட 12,773 ரன் மற்றும் 433 ஒரு நாள் போட்டிகளில் 44 சதம் <உட்பட 16, 953 ரன் எடுத்துள்ளார். மொகாலியில் இன்று நடக்கும் நான்காவது போட்டியில் 47 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களை எட்டி மகத்தான சாதனை படைக்கலாம்.

மிக நீண்ட காலமாக விளையாடிய போதும் சச்சினின் ரன் தாகம் குறையாதது ரசிகர்களை மட்டும் அல்ல சக வீரர்களையும் வியக்கச் செய்துள்ளது. இது குறித்து டில்லி போட்டியில் 78 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருது வென்ற துணை கேப்டன் யுவராஜ் கூறியது:
கிரிக்கெட் அரங்கின் வியக்கத்தக்க வீரராக சச்சின் திகழ்கிறார். பல்வேறு சாதனைகள் படைத்துள்ள போதும், இவரது ரன் தாகம் துளி அளவும் குறையவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் காண வேண்டுமென துடிக்கிறார். இவரை போல வேறு எவரும் 20 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாட வாய்ப்பில்லை. மிக நீண்ட காலமாக சாதித்து வரும் இவரை தற்போதே சக வீரர்கள் "தாத்தா' என செல்லமாக அழைக்கத் துவங்கி விட்டனர்.

சாதனை மன்னன்:
ஒரு நாள் போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைக்க காத்திருக்கிறார். இதனை கொண்டாடுவதற்கு சிறப்பு திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்துகிறார். எத்தனை முறை தான் இவரது சாதனையை பாராட்டி மகிழ்வது? இவருக்காக கொண்டாட்டம் நடத்தியே சோர்ந்து போய் விட்டோம்.

தோனி தான் நாயகன்:
டில்லி போட்டியில் கேப்டன் தோனியும் நானும் சேர்ந்து விவேகமாக விளையாடினோம். துவக்கத்தில் அடித்து ஆடாமல் நிதானத்தை கடைபிடித்தோம். ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்ததால் குறைந்தது 50 ரன்களாக சேர்க்க வேண்டுமென நினைத்தோம். ஆனால் 4வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 71 ரன்கள் எடுத்த தோனி மிகச் சிறப்பாக ஆடினார். உண்மையை சொன்னால், ஆட்ட நாயகன் விருது அவருக்கு தான் கிடைத்திருக்க வேண்டும். டிராவிட் மற்றும் தோனியுடன் இணைந்து விளையாடுவது வித்தியாசமான அனுபவம். இருவருமே வெவ்வேறான ஆட்ட பாணியை பின்பற்றக் கூடியவர்கள். டிராவிட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ஒரு நாள் போட்டிகளில் தோனி அதிரடியாக விளையாடக் கூடியவர். இவரிடம் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொள்ளலாம்.

விமர்சனத்துக்கு பதிலடி:
மந்தமான ஆடுகளங்களில் என்னால் நன்றாக விளையாட முடியாது என விமர்சிப்பதுண்டு. இதனை தகர்க்கும் விதமாக டில்லி போட்டியில் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்தேன். தற்போது 2-1 என முன்னிலை பெற்ற போதும், ஒருநாள் தொடரை இந்தியா வென்றுவிடும் என கூற இயலாது. ஏனென்றால் ஆஸ்திரேலிய உலகின் "நம்பர்-1' அணி. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கையோடு இந்தியா வந்துள்ளது. தவிர, கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு அணிகள் மோதிய தொடரை இழக்கவில்லை. எனவே, நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

சேவக் எதிர்பார்ப்பு:
இத்தொடரில் ஹர்பஜன் சிறப்பாகவே பந்துவீசுகிறார். விக்கெட் தான் கைப்பற்ற இயலவில்லை. டில்லி போட்டியில் சுழலில் கலக்கிய இவர், இழந்த தன்னம்பிக்கையை மீட்டுள்ளார். வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்படுவார். கடந்த போட்டிகளில் சேவக் நல்ல துவக்கம் கொடுத்தார். விரைவில் சதம் அடித்து அசத்துவார் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

0 comments:

Post a Comment