பாக்., அணிக்கு முகமது யூசுப் கேப்டன்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது யூசுப் நியமிக்கப்பட்டுள்ளார். யூனிஸ் கானுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க நியூசிலாந்து செல்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ., 24ல் துவங்குகிறது. இந்த தொடரில் இருந்து தனக்கு ஓய்வு தருமாறு கேப்டன் யூனிஸ் கான் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"" எனது பார்ம் சமீபகாலமாக சரியில்லை. இதனால் எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. மிக தீவிரமாக யோசித்து இந்த முடிவை எடுத்தேன். எனது குடும்பம் மற்றும் என்னைவிட எனக்கு தேசம் தான் முக்கியம். கட்டாயம் மீண்டும் வருவேன்,'' என்றார்.

யூனிஸ் கானின் இந்த வேண்டுகோளை அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முகமது யூசுப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக கம்ரான் அக்மலும், "டுவென்டி-20' அணிக்கு தொடர்ந்து அப்ரிதியும் கேப்டனாக இருப்பார்கள் என பி.சி.பி., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பி.சி.பி., தலைவர் இசாஜ் பட் கூறுகையில்,"" யூனிஸ் கானுக்கு உடற் தகுதி மற்றும் "பார்ம்' தான் இப்போது பிரச்னை. மற்றபடி அவர் வரும் உலக கோப்பை 2011 தொடர் வரை ஒருநாள் அணிக்கு கேப்டனாக நீடிப்பார். அவர் கேட்டுக்கொண்டதால் ஓய்வு தரப்பட்டுள்ளது,'' என்றார்.

பதவி இறக்கமா?
அபுதாபியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என பாகிஸ்தான் இழந்தது. இதையடுத்து 3 சீனியர் வீரர்கள், யூனிஸ் கானை நீக்க வேண்டும் என பி.சி.பி.,யிடம் போர்க்கொடி உயர்த்தியதாக தெரிகிறது.

இந்த வீரர்களின் நெருக்கடிக்கு பணிந்து தான் பி.சி.பி., யூனிஸ் கானை கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கியுள்ளதாக மற்றொரு செய்தி தெரிவிக்கிறது. இதற்கு வலுவான காரணங்களும் கூறப்படுகிறது.
* நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல, 3வது போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலை பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டது. இந்த முக்கிய போட்டியில் அனுபவ வீரர் முகமது யூசுப் நீக்கப்பட்டு, உமர் அக்மல் சேர்க்கப்பட்டார்.

* தவிர, யூனிஸ் கான் எளிதான முறையில் அவுட்டானதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

* துணைக்கேப்டன் அப்ரிதி, முன்னாள் கேப்டன் சோயப் மாலிக், "ஆல் ரவுண்டர்' அப்துல் ரசாக் போன்ற சீனியர் வீரர்களிடம் சரியான முறையில் தகவல் தொடர்பு கொள்ளாது இருந்தது போன்ற காரணங்கள், இந்த பதவி மாற்றத்துக்கு பின்னணியில் உள்ளது என கூறப்படுகிறது

0 comments:

Post a Comment