எழுச்சி பெறுமா இந்தியா? * இன்று ஆஸி.,யுடன் 5வது மோதல்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்தாவது ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி எழுச்சி பெற பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நாக்பூர், டில்லியில் நடந்த போட்டிகளில் இந்திய அணி வென்றது. மொகாலி ஆட்டத்தில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற, தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. ஐந்தாவது போட்டி(பகலிரவு), ஐதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று நடக்கிறது.

சரியில்லாத துவக்கம்:
சேவக், காம்பிர் ஜோடி வெற்றிகரமாக செயல்பட்டு வந்த நிலையில் சச்சின் திரும்பியதால் காம்பிர் தனது இடத்தை இழந்தார். ஆனால் சச்சின், சேவக் ஜோடி கடந்த நான்கு போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு 25, 21, 37 மற்றும் 40 ரன்கள் தான் சேர்த்துள்ளது. முக்கியமான இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, சிறந்த துவக்கம் வேண்டும். தவிர, சேவக் சற்று நிலைத்து நின்று ஆட முயற்சிக்க வேண்டும்.

வருகிறார் காம்பிர்:
துவக்கம் சொதப்புவதால் அடுத்து வரும் யுவராஜ், கேப்டன் தோனி நிலைத்து நின்று விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காயத்தினால் கடந்த போட்டியில் பங்கேற்காத காம்பிர், அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் விராத் கோஹ்லி தனது இடத்தை இழக்கலாம். ரெய்னா, ரவிந்திர ஜடேஜா போன்றவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். பலவீனமான ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் முன், இன்றாவது பேட்டிங்கில் அசத்தினால் இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்டலாம்.

இஷாந்த் சாதிப்பாரா?
மொகாலி போட்டியில் பந்து வீச்சாளர்கள் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் ஆஸ்திரேலியா போன்ற வலிமையான அணிக்கு எதிரான போட்டிகளில் இன்னும் சிறப்பான ஆட்டத்திறனை கொடுத்தால் கேப்டனுக்கு உதவியாக இருக்கும். இஷாந்த் கட்டுக்கோப்பாக பந்து வீச முயற்சித்தால் நல்லது. நெஹ்ரா மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். பிரவீண் குமார் இன்றும் கைகொடுப்பார் என நம்பலாம்.

ஹர்பஜன் நம்பிக்கை:
தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஏமாற்றிய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தற்போது முன்னேற்றம் கண்டுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ரவிந்திர ஜடேஜாவும் நம்பிக்கை அளிக்கிறார். இவர்களது அசத்தல் பந்துவீச்சு இன்றும் தொடர்ந்தால், ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கல்தான். பகுதிநேர பந்துவீச்சாளர்களான யுவராஜ், ரெய்னாவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். பீல்டிங்கில் ஒட்டுமொத்த இந்திய அணியும் மொகாலியில் சாதித்தது போல இன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

"டாப்-ஆர்டர்' அபாரம்:
ஆஸ்திரேலிய அணியின் "டாப் ஆர்டர்' பேட்டிங் வரிசை மிகுந்த பலமாக உள்ளது. கேப்டன் பாண்டிங், மைக்கேல் ஹசி தொடர்ந்து மிரட்டுகிறார்கள். தவிர, கேமரான் ஒயிட்டும் ரன்களை குவிக்க உதவுகிறார். துவக்க வீரர் வாட்சன் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது, பேட்டிங் வரிசை பலத்தை அதிகரிக்கிறது. ஷான் மார்ஷ் இன்றைய போட்டியில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

ஹென்ரிக்ஸ் காயம்:
பிரட் லீ, "ஆல் ரவுண்டர்' ஹோப்ஸ் இல்லாததால், ஆஸ்திரேலிய அணி ஜான்சனின் வேகப்பந்து வீச்சை மட்டும் எதிர்நோக்கி உள்ளது. சிடில் காயத்தை தொடர்ந்து ஹோப்சுக்கு பதில் வந்த ஹென்ரிக்சும் காயமடைந்து, இன்றைய ஆட்டத்தில் பங்கேற்காதது, பாண்டிங்குக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி <உள்ளது. வேறு வழியின்றி ஹில்பானஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம். சுழலில் நாதன் ஹாரிட்ஸ் சுழலில் கைகொடுத்தால் ஆஸ்திரேலிய அணி சாதிக்கலாம்.
--------------

சச்சினுக்கு தேவை "7' ரன்
இந்திய அணியில் பேட்டிங் "ஹீரோ' சச்சின், இன்று புதிய சாதனை படைக்க உள்ளார். இதுவரை 434 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 16,993 ரன்கள் குவித்துள்ளார். இன்றைய போட்டியில் 7 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் 17,000 ரன்களை கடந்து சாதனை படைக்கலாம். கடந்த மொகாலி போட்டியில் சாதிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அம்பயரின் தவறான தீர்ப்பினால் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
------

இம்மைதானத்தில் இதுவரை...
* இங்கு இந்தியா பங்கேற்றுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததுள்ளது.
* கடந்த 2007ல் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
* பேட்டிங்கில் இந்தியாவின் யுவராஜ் சிங் அதிகபட்சமாக, 121 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா சார்பில் சைமண்ட்ஸ், 89 ரன்கள் எடுத்துள்ளார்.
* பவுலிங்கில் இந்திய வீரர் அகார்கர், 55 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரட் லீ, 37 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
---

இன்றும் அசத்துவாரா யுவராஜ்
ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் யுவராஜ் சதம் கடந்து அசத்தியுள்ளார். கடந்த 2005ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 103, 2007ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 121 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் இன்றும் சாதிப்பார் என நம்பலாம்.
----

தோனி நம்பிக்கை
இன்றைய போட்டி குறித்து தோனி கூறுகையில்,""சச்சின் இன்று 17 ஆயிரம் ரன்களை கடந்த சாதிப்பார். இந்த தொடர் முழுவதும் வேகம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹர்பஜன், ஆஷிஸ் நெஹ்ரா பார்முக்கு திரும்பியுள்ளது நம்பிக்கை தருகிறது. ஆஸ்திரேலிய அணியினர் எப்போதும் வெற்றிக்காக கடைசி வரைக்கும் போராடக் கூடியவர்கள். இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு போராடுவோம்,'' என்றார்

0 comments:

Post a Comment