சச்சின் ஒரு சகாப்தம்

கிரிக்கெட் அரங்கில் 20 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள சச்சினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். கடந்த 1989 ம் ஆண்டு கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த இவர், தொடர்ந்து 20 ஆண்டுகளாக அசத்தி வருகிறார். சச்சின் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் கூறியது:

சச்சின் சாதனை பிரம்மிப்பாக உள்ளது. ஒரு விளையாட்டு வீரர் 20 ஆண்டுகளாக சாதிப்பது என்பது அரிய விஷயம். அவர் ஒரு ஜீனியஸ். அவரது ஆட்ட நுணுக்கங்களை தன்னம்பிக்கையின் வெளிப்பாடுகளாக கருதுகிறேன். சச்சினின் "ஷாட்கள்' அனைத்தும் கவிதைகள், ஆனால் அவரது "ஆப்-டிரைவ்' அதிரடி எனது இதயத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.


நான் அவரின் ரசிகன்:

"நான் அமிதாப்பின் ரசிகன்' என்று சச்சின் கூறியுள்ளது அவரது பெருந்தன்மையை குறிக்கிறது. அவர் என்னை ரசிக்கும் அளவுக்கு எனக்கு தகுதி இருக்கிறது என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். என் குடும்பத்தில் நான் உள்பட அனைவருமே சச்சினின் தீவிர ரசிகர்கள். அவர் ஒரு சகாப்தம். உண்மையான சாதனையாளர்களுக்கு நெருக்கடிகள் வருவது இயல்பு. நெருக்கடியை அவர்கள் சந்திக்கவில்லை என்றால், சாதிக்க முடியாது. சச்சின் ஆட்டத்தை பார்ப்பதற்காக "ஷுட்டிங்கிற்கு' பல முறை கால தாமதமாக சென்றுள்ளேன். அவரது ஆட்டங்கள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும்.


முதல் சந்திப்பு:

முதன் முதலாக சச்சினை பார்த்தது என் நினைவில் இல்லை. ஆனால் நான் அவரை பார்க்கும் போது எல்லாம், அவரது மரியாதை, தன்னடக்கம், அமைதியான குணம் ஆகியவற்றில் எந்த மாறுதலையும் காணவில்லை. அவருடன் இணைந்து "கவுன் பனேகா குரோர்பதி' மற்றும் ஒரு சில விளம்பர படங்களில் நடித்தது எதிர்பாராமல் நடந்த மகிழ்ச்சியான அனுபவம்.


விதிவிலக்கு:

பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்குவது இயல்பு. ஆனால் சச்சின் இதற்கு விதிவிலக்கு. அவரின் முறையான நடவடிக்கைகளும், ஒழுக்கமும் தான் அவரை வேறுபடுத்தி உள்ளது. சச்சின் தனது "பேட்டால்' மட்டுமே அதிகம் பேசுவார். அவரது "பேட்' பேசினால், சர்ச்சைகள் அவரை விட்டு விலகிப்போகும்.


சாதனையாளர்:

சச்சினையும், என்னையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒரு திரைப்பட வெளியீட்டு விழாவில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கருத்தை நடிகர் அமீர் கான் கூறினார். அதாவது,"" லதா மங்கேஷ்கரோ அல்லது சச்சினோ தங்களை சாதனையாளர்களாக சொல்லிக் கொள்ள மாட்டார்கள்' என்றார்.

சுருக்கமாக சொன்னால், தங்களை சாதனையாளர்களாக கருதுபவர்கள் வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் தான் அவர்களை புகழ்வார்கள்.
இவ்வாறு அமிதாப் கூறினார்.

0 comments:

Post a Comment